ADDED : ஜன 23, 2024 05:52 AM

“அயோத்தியில் ராமர் கோவில் திறந்ததன் மூலம், நுாற்றாண்டு கால கனவு, நனவாகி உள்ளது. பலரது தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது,” என, முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடா - சென்னம்மா தம்பதி, மகன் குமாரசாமி, பேரன் நிகில் ஆகியோர் தனி விமானத்தில் அங்கு சென்றனர்.
நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த அவர்கள், நிகில் பிறந்த நாளை, ஹோட்டலிலேயே கேக் வெட்டி கொண்டாடினார். பின், ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றனர். பால ராமரை தரிசனம் செய்தனர்.
இதன் பின், 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குமாரசாமி வெளியிட்ட அறிக்கை:
அயோத்தியில் ராமர் கோவில் திறந்ததன் மூலம், நுாற்றாண்டு கால கனவு, நனவாகி உள்ளது. எண்ணற்றவர்களின் தியாகத்திற்கு பலன் கிடைத்துள்ளது.
அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் அமைத்து, குழந்தை ராமர் பிரதிஷ்டை செய்யும் விழா, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. அனைத்து செயல்வீரர்களின் உழைப்பின் காரணமாக, இப்படி ஒரு அதிசய நிகழ்வில் பங்கேற்றது எனக்கு கிடைத்த பாக்கியம்.
ராமருக்கு பக்தியுடன் வணங்கிய பாக்கியமும் கிடைத்தது. அனைத்து செயல்வீரர்களையும் நினைத்து, ராமர் பக்தர்களுக்கு வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன்.
ஒவ்வொருவருக்கும், அந்த ராமர் கடவுள் மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி, செழிப்பு ஆகிய அருள்பாலிக்க வேண்டும் என்று பக்தியுடன் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
.- நமது நிருபர் -

