ADDED : அக் 18, 2024 07:43 AM

பெலகாவி: கட்டுப்பாட்டை இழந்த பைக் ஆற்றில் பாய்ந்ததில், நீரில் மூழ்கி தம்பதி உயிரிழந்தனர்.
பெலகாவி, ஹுக்கேரி போகத்தியனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் பதிகேரா, 53; இவரது மனைவி ஜெயஸ்ரீ, 45. நேற்று மதியம் 2:00 மணியளவில் கோடகேரி கிராமத்தில் இருந்து போகத்தியனஹட்டிக்கு பைக்கில் சென்றனர்.
நொகனிஹாலா என்ற கிராமத்தில் ஓடும் கட்டபிரபா ஆற்றின் தரைப்பாலத்தில் பைக் சென்றது. அப்போது சுரேஷ் கட்டுப்பாட்டை இழந்த பைக், தறிகெட்டு ஓடி, ஆற்றில் பாய்ந்தது. நீரில் மூழ்கி தம்பதி இறந்தனர்.
இதை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், ஹுக்கேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரப்பர் படகு மூலம் தம்பதி உடலை தேடும் பணி நடந்தது.
ஜெயஸ்ரீ உடல் மட்டும் கிடைத்தது. சுரேஷ் உடலை தேடும் பணி நடக்கிறது. பாலத்திற்கு தடுப்பு சுவர் அமைக்காததே தம்பதி இறப்புக்கு காரணம் என்று, அதிகாரிகள் மீது கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.