முதல்வரை தாக்கியவர்கள் மீது குற்றச்சதி வழக்கும் பதிவு
முதல்வரை தாக்கியவர்கள் மீது குற்றச்சதி வழக்கும் பதிவு
ADDED : ஆக 26, 2025 10:13 PM
புதுடில்லி:டில்லி முதல்வர் ரேகா குப்தாவை தாக்கியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது, கூடுதலாக குற்றச்சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி சிவில் லைன்ஸில் உள்ள முகாம் அலுவலகத்தில், 19ம் தேதி பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்த முதல்வர் ரேகா குப்தா மீது, ராஜேஷ்பாய் என்பவர் தாக்குதல் நடத்தினார்.
இதில், அவர் படுகாயம் அடைந்தார். தாக்குதல் நடத்திய குஜராத்தைச் சேர்ந்த ராஜேஸ் பாய் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், குஜராத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தாஷின் செய்யது என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர், ராஜேஸ் பாயின் நண்பர். முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதற்காக, ராஜேஸ் பாய்க்கு, தாஷின் செய்யது பணப் பரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மீது, தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக குற்றச்சதி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறியதாவது:
தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்பிருந்தால், குற்றச்சதி வழக்கு பதிவு செய்யலாம். அதன் அடிப்படையில் தான், இவர்கள் மீது குற்றச்சதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இந்த சதியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். குற்றச்சதி வழக்கில் தண்டனை நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.