ரூ.500 கோடி சந்தை முதலீடு உள்ள குடும்பத்திற்கு மணமகன் தேவை: வினோத திருமண விளம்பரம் வைரல்
ரூ.500 கோடி சந்தை முதலீடு உள்ள குடும்பத்திற்கு மணமகன் தேவை: வினோத திருமண விளம்பரம் வைரல்
ADDED : பிப் 13, 2025 03:34 PM

மும்பை: ரூ.500 கோடி சந்தை முதலீடு கொண்ட மும்பையைச் சேர்ந்த ஒரு வர்த்தக குடும்பம், தங்கள் மகளுக்கு மணமகனைத் தேடுவதாகக் கூறும் ஒரு வினோதமான திருமண விளம்பரம் சமூக ஊடகங்களில் புயலைக் கிளப்பியுள்ளது.
மணமகன் தேவை விளம்பரம் என்றால், சம்பந்தப்பட்ட பெண்ணின் தோற்றம், கல்வி, மற்றும் தொழில் போன்ற விபரங்களை தான் பகிர்வார்கள்.
'ரெடிட்' இணையதளத்தில் பகிரப்பட்ட ஒரு விளம்பரத்தில், அதற்கு பதிலாக, ரூ.500 கோடி சந்தை முதலீடு கொண்ட வர்த்தக குடும்பத்தில் உள்ள 28 வயதான பெண்ணின் திருமணத்திற்கு பொருத்தமான மார்வாரி/குஜராத்தி மணமகனை எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தில் 'சந்தை முதலீடு' என்ற வார்த்தை தான் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சமூக வலைதளத்தில் பலர் கேலியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
500 கோடிக்கும் மேற்பட்ட சொத்து மதிப்புள்ள குடும்பங்கள் பொதுவாக உயர்குடி வட்டாரங்களை இறுக்கமாகப் பிணைத்துள்ளன. அவர்கள் இப்படி விளம்பரம் செய்யத் தேவையில்லை என்கிறார் ஒருவர்.
மற்றொருவர், 'அவரது தொடர்பு எண்ணை எனக்கு அனுப்புங்கள்' என்று கூறியுள்ளார்.
இது ஒத்த அந்தஸ்துள்ள மணமகனைப் பெறுவதற்கான ஒரு தந்திரம். நான் மார்வாடிக்கு மாறத் தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறார் மற்றொருவர்.
இவ்வாறு நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.