ADDED : ஜன 26, 2025 11:01 PM

விஜயநகரா: குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் இரண்டாவது மிக உயரமான கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி, கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாட்டின் 76வது குடியரசு தினம் கர்நாடகா முழுதும் நேற்று கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. கொடியேற்றி நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கும் பொறுப்பை, அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களிடம், முதல்வர் சித்தராமையா ஒப்படைத்திருந்தார். இதன்படி அமைச்சர்கள் கொடியேற்றினர்.
விஜயநகரா மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜமீர் அகமது கான், விஜயநகராவின், புனித் ராஜ்குமார் விளையாட்டு அரங்கில் உள்ள, நாட்டின் மிக பெரிய கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றினார். அதன்பின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அப்போது கொடி கம்பத்தில் இருந்து, மூவர்ண கொடி திடீரென கீழே விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக கொடி கம்பம் அருகில் நின்றிருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கொடி கீழே விழ காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சர் எச்சரித்தார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

