'டேட்டிங்' ஆசையில் சென்ற நபரை கடத்திய மூன்று பேர் கும்பல் கைது
'டேட்டிங்' ஆசையில் சென்ற நபரை கடத்திய மூன்று பேர் கும்பல் கைது
ADDED : நவ 11, 2024 03:37 AM
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன் பின் தெரியாத பெண் அழைத்ததை நம்பி, ஆசையாக சென்ற 50 வயது நபரை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி., மாநிலம் லலித்பூரைச் சேர்ந்தவர் லல்லு சவுபே, 50. இவரது மொபைல் போனுக்கு கடந்த 7ம் தேதி ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய பெண், அவரை நேரில் சந்திக்க வரும்படி அழைப்பு விடுத்தார்.
முன் பின் தெரியாத பெண் என்ற சிந்தனை எதுவும் இல்லாமல், அவர் அழைத்ததும் ஆவலுடன் லல்லு புறப்பட்டு சென்றார். வெளியே சென்ற தந்தை வீடு திரும்பாததை அடுத்து, அவரது மகன் போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, தந்தையை கடத்தி வைத்துள்ளதாக தொலைபேசி வழியாக மகனிடம் தெரிவித்த மர்ம நபர்கள், 3 லட்சம் ரூபாய் தராவிட்டால் அவரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து, போலீசாரின் உதவியை லல்லுவின் மகன் நாடினார். போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மகன் என்ற பெயரில் பணத்துடன், மர்ம நபர்கள் கூறிய இடத்துக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைத்த போலீசார், அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
ஜான்சி அருகே பணத்தை வாங்க மர்ம நபர்களில் ஒருவர் வந்ததை அடுத்து, அவர் வாயிலாக கடத்தல் கும்பல் இருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
அங்கிருந்த லல்லுவை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். பணத்தாசையால் கடத்தலில் ஈடுபட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.