ADDED : ஏப் 17, 2025 06:33 AM
குருகிராம் : உத்தர பிரதேசத்தின் குருகிராமில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில், 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானப் பணிப்பெண் ஒருவர் தங்கள் நிறுவனத்தின் பயிற்சிக்காக உ.பி.,யின் குருகிராமில் உள்ள ஹோட்டலில் கணவருடன் தங்கியிருந்தார். 46 வயதான அந்த விமானப் பணிப்பெண் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 13ம் தேதி வீடு திரும்பியதும், சிகிச்சையின் போது, மருத்துவமனை ஊழியர்கள் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து, போலீசில் புகார் அளித்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் கடந்த 5ம் தேதி சிகிச்சையில் இருந்தேன். அப்போது, மருத்துவமனை ஊழியர்கள் சிலர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர். தகாத இடங்களில் தொட்டனர்.
லேசான மயக்கத்தில் இருந்ததால் என்னால் எதிர்க்க முடியவில்லை. சத்தம் போடவும் முடியவில்லை. ஆனால், நடந்த சம்பவத்தை என்னால் உணர முடிந்தது. அப்போது, இரு செவிலியர்களும் அந்த ஊழியர்கள் அருகில் இருந்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் தெரிவிக்காத மருத்துவமனை நிர்வாகம், விசாரணைக்கு ஒத்துழைக்க உறுதியளித்துள்ளது.