தற்கொலைக்கு துாண்டிய மனைவி பேச்சு இன்ஜினியர் எழுதிய கடிதத்தில் பகீர்
தற்கொலைக்கு துாண்டிய மனைவி பேச்சு இன்ஜினியர் எழுதிய கடிதத்தில் பகீர்
ADDED : டிச 13, 2024 02:57 AM

புதுடில்லி, உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் அதுல் சுபாஷ், 34. கர்நாடகாவின் பெங்களூரில் மென்பொருள் இன்ஜினியராக பணியாற்றினார்.
மனைவி நிகிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கு உ.பி.,யின் ஜான்புர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள வீட்டில் அதுல் சுபாஷ் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, 24 பக்க கடிதம் மற்றும் 90 நிமிட வீடியோ பதிவு வாயிலாக தற்கொலை முடிவுக்கான காரணங்களை தெரிவித்து உள்ளார்.
அதில், மனைவி நிகிதா, மாமியார் நிஷா, மைத்துனர் அனுராக் மற்றும் மனைவியின் தாய்மாமா சுஷில் ஆகியோர் அளித்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
ஜான்புர் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, 'கணவர் மீது மனைவி சுமத்தும் பொய்யான புகார்களால் லட்சக்கணக்கான அப்பாவி கணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்' என, நீதிபதி ரீட்டா கவுஷிக் இடம் தெரிவித்தேன்.
உடனே என் மனைவி, 'நீ ஏன் தற்கொலை செய்து சாகக் கூடாது' என்றார்.
இதைக் கேட்டு சிரித்த நீதிபதி, நிகிதாவை நீதிமன்ற அறையை விட்டு செல்லும்படி கூறினார். பின், இந்த வழக்கை சுமூகமாக முடித்து வைக்க என்னிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் என் மாமியர் நிஷா, 'நீ இன்னும் தற்கொலை செய்து கொண்டு சாகவில்லையா? இன்று செத்துவிட்டாய் என செய்தி வரும் என்று எதிர்பார்த்தேன்' என்றார். என் குடும்பம் மீதும், நீதித்துறை மீதும் நம்பிக்கை இழந்ததை அடுத்து தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, நிகிதா மற்றும் அவரது தாயாரை தேடி, கர்நாடகா போலீசார் உத்தர பிரதேசத்துக்கு சென்றுள்ளனர்.