தாய்க்கு ஒரு தாலாட்டு இயற்கையின் மடியில் கோவில் கட்டிய நடிகர்
தாய்க்கு ஒரு தாலாட்டு இயற்கையின் மடியில் கோவில் கட்டிய நடிகர்
ADDED : டிச 07, 2024 11:05 PM

திரையுலகில் சாதனை செய்ததுடன், சமூக சேவையிலும் ஈடுபாடு காட்டிய தன் தாய் லீலாவதிக்கு, நடிகர் வினோத்ராஜ் கோவில் கட்டியுள்ளார். இம்மாதம் 5ம் தேதி, இக்கோவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மூத்த நடிகை லீலாவதி, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, துளு, மலையாளம் மொழிகளில் நடித்தவர்.
தென்னக திரையுலகின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ராஜ்குமார், கல்யாண்குமார், என்.டி.ராமாராவ் உட்பட பலருடன் நடித்தவர். ஏராளமான நாடகங்களிலும், லீலாவதி நடித்துள்ளார்.
சமூக சேவை
லீலாவதிக்கு விவசாயம் என்றால் அலாதி பிரியம். வளர்ப்பு பிராணிகள் மீது அதிக அன்பு செலுத்தினார். சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டவர். பெங்களூரு பிறநகரின் சோழதேவனஹள்ளியில் கால்நடை இலவச மருத்துவமனை கட்டினார். இவரது ஒரே மகன் வினோத்ராஜ். தாயின் சேவை மனப்பான்மைக்கு வலது கையாக இருந்தவர்.
பல நாட்களாக படுத்த படுகையாக இருந்த லீலாவதி, ஓராண்டுக்கு முன்பு காலமானார். தன் அன்பு தாய்க்கு வினோத்ராஜ் கோவில் கட்டியுள்ளார். இம்மாதம் 5ம் தேதி, கோவில் திறக்கப்பட்டது. துணை முதல்வர் சிவகுமார் திறந்துவைத்தார். இதற்கு 'லீலாவதி கோவில்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. லீலாவதி காலமாகி, ஓராண்டு நிறைவடைவதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வினோத்ராஜ் கூறியதாவது:
பெங்களூரு ரூரல், நெலமங்களாவின் சோழதேவனஹள்ளியில் ஒரு ஏக்கரில், லீலாவதியின் அபூர்வமான படங்கள், ஓவியங்கள் அடங்கிய கோவில் கட்டப்பட்டது.
இதன் அருகில் என் தாயின் விருப்பப்படி, சிறிய கலை அரங்கம் கட்டியுள்ளோம். இங்கு நாடகங்கள், நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிற்றுண்டி
நெலமங்களாவில் இருந்து, 8 கி.மீ., தொலைவில், இயற்கையின் மடியில் கோவில் அமைந்துள்ளது. இதை பார்க்க வருவோருக்கு சிற்றுண்டி வசதி செய்யப்பட்டுள்ளது.
காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். உணவுக்கூடம் உள்ளது. எங்கள் மீதுள்ள அன்பால், சில நாட்கள் இங்கு தங்கி செல்ல விரும்புவோருக்கு இரண்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன. அழகான பூங்கா உள்ளது.
சோழதேவனஹள்ளியில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் இலவச மருத்துவமனை கட்டியுள்ளோம். ஏழை கலைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குகிறோம்.
தமிழகத்தின் புதுப்பாக்கம் கிராமத்திலும், 30 லட்சம் ரூபாய் செலவில் இலவச மருத்துவமனை கட்டுகிறோம். இது என் தாய்க்கு நன்றிக்கடன் தீர்க்க, எனக்கு கிடைத்த வாய்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறுகிறார்
- நமது நிருபர் -.