ADDED : நவ 15, 2024 09:12 PM
புதுடில்லி:டில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின், நான்காம் கட்ட திட்டத்துக்காக ஆறு பெட்டிகள் கொண்ட முதல் ரயில் வந்தடைந்தது.
இதுகுறிது, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில், சென்னைக்கு அருகே ஸ்ரீசிட்டியில் உள்ள 'அல்ஸ்டாம்' நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் டில்லிக்கு நேற்று வந்தடைந்தது.
இந்த ரயில் முகுந்த்பூர் டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
நான்காம் கட்ட திட்டத்தில் மொத்தம் 312 மெட்ரோ ரயில் பெட்டிகளைக் கொண்ட 52 ரயில்கள் இயக்கப்படும். மஜ்லிஸ் பார்க் முதல் மவுஜ்பூர், மேற்கு ஜனக்புரி முதல் ஆர்.கே. ஆஷ்ரம் மார்க் மற்றும் துக்ளகாபாத் முதல் டில்லி ஏரோசிட்டி வரை என படிப்படியாக இந்த திட்டம் நிறைவேற்றப்படும்.
இந்த 52 ரயில்களும் டிரைவர் இல்லாமல் இயக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த ரயில்கள் மணிக்கு 85 - 95 கி.மீ., வேகத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நான்காம் காட்ட திட்டத்தில் மேலும் 86 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் வசதியைப் பெறுகிறது. டில்லியில் தற்போது392.4 கி.மீ., தூரத்துக்கு 288 நிலையங்களுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உத்தர பிரதேசத்தின் நொய்டா, - கிரேட்டர் நொய்டா மற்றும் ஹரியானா மாநிலத்தின் குருகிராம் ஆகிய இடங்களை டில்லியுடன் மெட்ரோ ரயில் இணைக்கிறது. நாட்டிலேயே
முதன் முறையாக டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் மெஜந்தா வழித்தடத்தில் 2020ம் ஆண்டு டிசம்பரில் துவக்கப்பட்டது. அதைத் தொடந்து, 2021ம் ஆண்டு நவம்பரில் பிங்க் வழித்தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.