ADDED : ஏப் 27, 2025 07:40 AM

பாகிஸ்தான் நமது அண்டை நாடு; ஆனால் அண்ட முடியாத எதிரி நாடு. ஆனால், பாகிஸ்தானியரை பொறுத்தவரை இந்தியாவை பல்வேறு விதங்களில் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தானில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. உயர்தர மருத்துவமனைகளோ, அதிநவீன சிகிச்சை முறைகளோ அங்கு கிடையாது. பயங்கரவாதிகளுக்கு நிதி வாரி வழங்குவதில் தான், அங்குள்ள அரசு அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், மருத்துவ சிகிச்சைக்காக பாகிஸ்தானியர் பெரும்பாலும் இந்தியாவுக்கு தான் வருகின்றனர்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அட்டாரி - வாஹா சோதனைச் சாவடியை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டது. 'சார்க்' விசா சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த, பாகிஸ்தானியர் பலரும் பரிதவிப்பில் உள்ளனர்.
பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்த ஒரு பாகிஸ்தானியர், தனது இரண்டு குழந்தைகளை ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.
அவர் கூறுகையில், ''எனது 9 மற்றும் 7 வயது குழந்தைகள் இருவர் பிறவி இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை வசதிகள் அளிக்க பாகிஸ்தானில் எந்த வசதியும் இல்லை. டில்லியில் உயர்தர சிகிச்சை இருப்பதால், அழைத்து வந்துள்ளேன். அவர்களின் அறுவை சிகிச்சை, அடுத்த வாரம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் நலமுடன் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பஹல்காம் சம்பவத்துக்குப் பின், நாங்கள் உடனடியாக பாகிஸ்தான் திரும்புமாறு கூறப்பட்டுள்ளோம். என்ன செய்வது என்று தெரியவில்லை. மருத்துவர்கள் நன்கு கவனிக்கின்றனர். எனது குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு நான், இரு நாட்டு அரசுகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்,'' என்றார்.

