உதயமானது புதிய இந்தியா; வாருங்கள் கொண்டாடுவோம் வாசகர்களே...; பார்லியில் பிரதமர் மோடி உரை!
உதயமானது புதிய இந்தியா; வாருங்கள் கொண்டாடுவோம் வாசகர்களே...; பார்லியில் பிரதமர் மோடி உரை!
UPDATED : ஆக 02, 2025 05:24 PM
ADDED : ஆக 01, 2025 07:49 AM

ஆப்பரேஷன் சிந்தூர் முடிந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு என்ன கொண்டாட்டம் வேண்டியிருக்கிறது? நிச்சயமாக பலருக்கும் இந்த கேள்வி எழும். நியாயமான கேள்வி. பாகிஸ்தானுடன் நடந்த ராணுவ நடவடிக்கை வெற்றியில் முடிந்ததாக ராணுவமே அறிவித்தாலும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுகொள்ளவில்லை. நிறைய கேள்விகள் கேட்டன. சந்தேகங்களை கிளப்பினார்கள்.
சமூக ஊடகங்கள் அபரிமிதமான சுதந்திரத்துடன் செயல்படுகின்ற சூழலில், ஏஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் கைகொடுத்த காரணத்தால், அந்த கேள்விகளும் சந்தேகங்களும் நாட்டின் மூலைமுடுக்கெல்லம் பரவின. அதனால் பெருவாரியான பொதுமக்கள் மனதிலும் அவை எதிரொலித்தன.
போதாக்குறைக்கு, எப்போதுமே இந்தியா பற்றிய செய்தி என்றால் இளக்காரமாக கையாண்டு பழகிப் போன மேற்கத்திய ஊடகங்கள், தங்கள் அரசுகளின் உதவியுடன் சில தகவல்களை பெற்று, அவற்றை ஊதி பெரிதாக்கி சர்வதேச அளவில் பரப்பினார்கள். வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்பும் நமது மக்கள், நம்மூர் ஊடகங்களை காட்டிலும் மேற்கத்திய ஊடகங்களுக்கு முதல் மரியாதை கொடுப்பதால், ஆப்பரேஷன் சிந்தூர் தோல்வியில் முடிந்ததை போன்ற ஒரு பிம்பம் கட்டி எழுப்பப்பட்டது.
எத்தனை விமானங்களை இழந்தோம்? எத்தனை உயிர்களை பலி கொடுத்தோம்? பாகிஸ்தான் அடி வாங்கியதற்கு ஆதாரமான போட்டோ எங்கே? வீடியோ எங்கே? அவர்கள் அடிவாங்கி கொண்டிருந்தார்கள் என்றால், போரை எதற்காக திடீரென்று நிறுத்தினீர்கள்? அமெரிக்க அதிபர் எப்படி இந்தியாவின் போர் நிறுத்த முடிவை அறிவிக்க முடியும்? அப்படியானால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடி பணிந்ததா இந்தியா? என்று எதிர்க்கட்சிகள் கேள்விக்கணைகளை ஏவுகணைகளாக செலுத்தின.
அரசியல்வாதிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் மரபு கிடையாது என்பதால், ராணுவம் அமைதி காத்தது. ஆப்பரேஷன் சிந்தூர் சம்பந்தமாக அரசு மறைக்கும் உண்மைகளை தெரிந்து கொள்ளும் உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது; ஆகவே, எங்களின் அத்தனை கேள்விகளுக்கும் விடையளிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் என்று ஜனாதிபதியிடம் மனு சமர்ப்பிக்கும் அளவுக்கு தீவிரம் காட்டின நமது எதிர்க்கட்சிகள்.
இதற்கு மேலும் அமைதி காத்தால், இந்தியாவின் பெயர் ஒட்டுமொத்தமாக களங்கப்பட்டு போகும் என்று உணர்ந்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேரம் விவாதம் நடத்த சம்மதித்தது. எதிர்க்கட்சிகள் என்னென்ன பேச, கேட்க, விமர்சிக்க விரும்பினவோ அவை அனைத்துக்கும் நேரம் அளித்த பிறகு, விவாதத்தை முடித்து வைத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
சமீபகால வரலாற்றில் ஒரு பிரதமர் இந்த அளவுக்கு விரிவான தகவல்களோடு, இறந்த கால, நிகழ்கால, எதிர்கால இந்தியாவின் பரிணாமங்களை ஒப்பிட்டும் உரசிப் பார்த்தும் உணர்ச்சிகரமாக உரை நிகழ்த்திய தாக எவரும் பார்த்ததில்லை. ஆப்பரேஷன் சிந்தூர் என்றால் என்ன என்பது மட்டுமல்ல, உலக அரங்கில் இந்தியாவின் நிலை என்ன, நமது ராணுவத்தின் தரம் என்ன, மக்களின் விருப்பங்கள் என்ன, எதிர்க்கட்சிகளின் எண்ண ஓட்டம் என்ன என்று அக்குவேறு ஆணிவேறாக அலசினார் மோடி.
போர் வேண்டாம் என்று உலக நாடுகளுக்கு போதிக்கும் இந்தியா எப்படி போரில் குதிக்க முடியும் என்று பிரதமர் கேட்டார். பாகிஸ்தானுடன் நாம் நடத்தியது போரல்ல, தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 'ஒரு மிலிட்டரி ஆப்பரேஷன்' மட்டுமே என்பதை அவர் விளக்கினார். போரினால் ஏற்படும் அழிவும் பொருளாதார இழப்பும் நாட்டின் வளர்ச்சியை முடக்கி, பல ஆண்டுகளுக்கு பின்தள்ளி இருக்கும் என்பதை அவர் சொல்லாமலே புரியவைத்தார்.
எதற்காக சிறப்பு விவாதம் கேட்டோம் என்று எதிர்க்கட்சிகள் நொந்துபோகும் அளவுக்கு, இந்திய வரலாற்றின் சில இருண்ட பக்கங்களை அவர் வெளிச்சத்துக்கு எடுத்து வந்து வாசித்து காட்டினார். என்றாலும் சில தகவல்களை அவர் வெளிப்படையாக வெளியிடவில்லை. வல்லரசு நாடுகளின் சில தலைவர்கள் வாய்க்கு வந்ததை பேசும்போது, அதை கண்டும் காணாதது போல் கடந்து போவதும் ராஜதந்திரம் என்பதை அவர் வேறு வார்த்தைகளால் உணர்த்தினார்.
சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது என்பதை போல, ஒரு தளவாடம் கூட இழக்காமல் போரில் வெற்றி காண முடியாது என்பதால், எத்தனை டிரோன், எத்தனை விமானம், எத்தனை குண்டுகள் கைவிட்டு நழுவின என்ற கணக்கையெல்லாம் அவர் வாசிக்கவில்லை.
'உன்னுடைய சாதனையை உலகம் பாராட்ட மறுத்தால், நீயே பாராட்டிக் கொள்; ஏனென்றால்
இடைவிடாத முயற்சி, திட்டமிடல், கடுமையான உழைப்பு, அபாரமான அறிவாற்றல் போன்ற உன்னதமான அம்சங்களின் சங்கமம்தான் வெற்றியும் சாதனையும். நிச்சயம் அவை பாராட்டுக்கு தகுதியானவை' என்று தமிழ்வாணன் சொன்னார்.
இந்திய ராணுவத்தின் மகத்தான வெற்றி இது. ஒவ்வொரு இந்தியனுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆகவே இது கொண்டாட வேண்டிய சாதனை, சந்தேகங்கள் கேள்விகள் எல்லாம் மோடியின் உச்சக்கட்ட உரையில் பஸ்பமாகி போனதால், வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஆப்பரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாடுவோம். ஏனென்றால், இது புதிய இந்தியா உதயமானதன் பிரகடனம், ஜெய்ஹிந்த்!
பார்லியில் பிரதமர் மோடி ஆற்றிய உணர்ச்சி மிகுந்த உரை

