ADDED : ஜன 21, 2024 12:11 AM

'
நம் நாட்டில் தேசப்பற்று கொண்டவர்களுக்கு பஞ்சம்இல்லை. ராணுவத்தில் இணைய இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றனர். கர்நாடகாவின், குடகு மாவட்டத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும் ராணுவ சிப்பாய்கள் உள்ளனர்.
இங்குள்ளவர்களின் ரத்தத்தில் தேசப்பற்று கலந்துள்ளது. பிறப்பில் இருந்தே வீரமானவர்கள் கொடவர்கள்.
கே.எம்., காரியப்பா, ஜெனரல் திம்மய்யாவை குடகுவை சேர்ந்தவர்கள். இவர்களை மக்கள் போற்றி வணங்குகின்றனர். பொதுவாக வீடுகளில் பிள்ளைகளை, படித்து என்னவாக விரும்புகிறீர்கள் என, கேட்டால் பலரும் டாக்டர், போலீஸ், பொறியாளர், வக்கீல் ஆக விரும்புவதாக பதிலளிப்பர். ஆனால், குடகின் கிராமத்தின் பிள்ளைகளை கேட்டால், டாக்டர், பொறியாளர் என, பதிலளிப்போர் அபூர்வம். மாறாக ராணுவத்தில் சேர்ந்து, உயர் அதிகாரியாக வேண்டும் என்றே பெரும்பாலானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
பெருமைக்குரிய குடகில், ராணுவ பரம்பரையின் கிரீடத்தில், மற்றொரு மணி மகுடம் போன்று ராணுவத்தினரின் சாகசங்களை பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் உள்ளது. குடகின், மடிகேரியில், ராணுவ அருங்காட்சியம் அமைந்துள்ளது.
குடகில் பிறந்து ராணுவத்தில் உயர் பதவி வகித்த ஜெனரல் திம்மையா, நாட்டுக்கு முன் மாதிரியாக உள்ளவர். அவர் பிறந்து, வளர்ந்த வீடு தற்போது இந்திய ராணுவத்தின் மகத்துவத்தை பறைசாற்றும் அருங்காட்சியகமாக மாறியுள்ளது. இதை 2021 பிப்ரவரி 7ல், அன்றைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.
மடிகேரியின், தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதில் ராணுவ சிப்பாய்களின் நினைவிடங்கள், யுத்த டாங்கர், சுகோய் யுத்த விமானங்கள் நாட்டின் ராணுவ சக்தியை கூறுகின்றன. ஜெனரல் திம்மையா பயன்படுத்திய அன்றைய ஸ்கூட்டர், அவர் குடும்பத்துடன் உள்ள புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா பல்வேறு நாடுகளுடன் யுத்தம் நடத்தியபோது, பயன்படுத்திய விதவிதமான துப்பாக்கிகள், யுத்த டைரி உட்பட, ராணுவம் சம்பந்தப்பட்ட பல பொருட்களை காணலாம். ஒரு முறை இந்த அருங்காட்சியத்துக்கு சென்று, வெளியே வந்தால் நமக்குள் நாட்டுப்பற்று ஊற்றெடுக்கும்.
பாகிஸ்தான் ராணுவத்தினரை விரட்டியடித்து, பந்தாட உதவி யுத்த டாங்கர் நமது ரியல் ஹீரோ. இதுவே ராணுவத்தின் சக்தி. அருங்காட்சியத்தை சுற்றி பார்த்தால், நமக்கும் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் இருக்காது.
பசுமையான இயற்கை காட்சிகள், அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சிகள், யானைகள் முகாம்களை காண, குடகுக்கு செல்லும் மக்கள், ராணுவ அருங்காட்சியகத்தை காண மறக்கக் கூடாது.

