பாலியல் வழக்கில் சிக்கியவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
பாலியல் வழக்கில் சிக்கியவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
ADDED : செப் 24, 2024 02:15 AM
தானே,மஹாராஷ்டிராவில், பள்ளி சிறுமியர் இருவரை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் துப்புரவு தொழிலாளி நேற்று என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம், தானே அருகே பத்லாபூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி., படிக்கும் இரு சிறுமியர் ஆக., 12ல் பாலியல் கொடுமைக்கு ஆளாகினர். சிறுமியருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்னரே இந்த விபரம் பெற்றோருக்கு தெரியவந்தது.
இது குறித்து போலீசில் புகார் அளித்தும், வழக்கு பதிய தாமதம் ஆனது. இதை கண்டித்து பத்லாபூரில் ரயில் மற்றும் சாலை மறியலில் பொது மக்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், பள்ளியின் துப்புரவு தொழிலாளி அக்சய் ஷிண்டேவை கைது செய்து தலோஜா சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை விசாரணைக்காக அக்சய் ஷிண்டேவை தலோஜா சிறையில் இருந்து பத்லாபூருக்கு போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.
மும்ப்ரா பைபாஸ் சாலையில் வேன் சென்ற போது, கைதி அக்சய் ஷிண்டே எஸ்.ஐ., நிலேஷ் மோரின் கை துப்பாக்கியை பறித்து, அவரை சுட்டதாக போலீசார் கூறினர். இதில் நிலேஷின் காலில் காயம் ஏற்பட்டது.
போலீசார் தற்காப்புக்காக திருப்பி சுட்டதில், அக்சய் ஷிண்டே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.