காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டில் தங்க வைக்க திட்டம்
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டில் தங்க வைக்க திட்டம்
ADDED : பிப் 22, 2024 07:02 AM
பெங்களூரு: ராஜ்யசபா தேர்தலில், கட்சி மாறி, ஓட்டு போடுவதை தவிர்க்கும் வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டில், தங்கவைக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
ராஜ்யசபாவுக்கு, கர்நாடகாவில் இருந்து காலியாகும் நான்கு இடங்களுக்கு வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் மூன்று வேட்பாளர்களையும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி இரண்டு வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளன. அதாவது நான்கு இடங்களுக்கு, ஐந்து வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை கட்சி மாறி ஓட்டு போட வைத்து, இரண்டு வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்கும் திட்டத்தில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி உள்ளது.
அதாவது அதிருப்தியில் இருக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை கண்டறிந்து, அவர்களின் ஓட்டுகளை பெற, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இது ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், கட்சி மாறி ஓட்டு போடுவதை தவிர்க்க, தங்கள் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கவும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போடும்படி பாடம் எடுக்கவும், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் திட்டம் தீட்டி உள்ளனர்.
சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டிற்கு அழைத்து செல்லப்படும் வாய்ப்பு உள்ளது.