ரீல்ஸ் மோகத்தில் செய்த சேட்டை; சாலையில் ரூபாய் நோட்டு கத்தைகளை வீசிய வாலிபர் கைது!
ரீல்ஸ் மோகத்தில் செய்த சேட்டை; சாலையில் ரூபாய் நோட்டு கத்தைகளை வீசிய வாலிபர் கைது!
ADDED : டிச 19, 2024 12:23 PM

ஹைதராபாத்: தெலங்கானாவில் சாலையோரம் பணத்தை வீசி ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பிரபலத்தை போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் கன்டன்ட் கிரியேட்டராக இருப்பவர் பானு சந்தர்,30. இவர் அண்மையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹைதராபாத் புறநகர் ரிங் ரோடு பகுதியில் ரூ.200 நோட்டு கட்டுக்களை சாலையோரம் வீசி விட்டு, தன்னுடைய வீடியோவை பார்ப்பவர்கள் இதனை வந்து எடுத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தார்.
அவரது இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த வழியாக சென்ற ஏராளமானோர் தங்களின் வாகனங்களை நிறுத்தி, பணத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகவும், அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும என்று புகார் கூறியிருந்தனர். இதனடிப்படையில், இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பானு சந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

