ADDED : ஜூன் 04, 2025 11:45 PM

இருபது ஆண்டு கால வரலாற்றில், ராஜஸ்தான் சட்டசபையின் புதிய கட்டடம், மொத்தமுள்ள 200 எம்.எல்.ஏ.,க்களும் ஒன்றாக அமர்ந்திருப்பதை ஒருபோதும் கண்டதில்லை.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் ஜெய்ப்பூரில், வரலாற்று சிறப்புமிக்க மான் சிங் டவுன் ஹாலில் இருந்த ராஜஸ்தான் சட்டசபை, 2001ல் ஜோதி நகரில் உள்ள அதி நவீன வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
இங்கு சட்டசபை செயல்பட துவங்கியதில் இருந்தே, மரணம், தகுதி நீக்கம், ராஜினாமா போன்ற காரணங்களால், முழு பலத்துடன் ஒருபோதும் சபை இயங்கியதே இல்லை.
பாரன் மாவட்டத்தின் அன்டா தொகுதியின் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்த கன்வர் லால் மீனா, குற்ற வழக்கில் சிக்கி பதவியை இழந்தார்.
இதனால் சட்டசபையின் பலம், 199 ஆக குறைந்ததை அடுத்து, சட்டசபையின் ராசி, வாஸ்து பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
பாகிடோரா தொகுதியைச் சேர்ந்த பாரதிய ஆதிவாசி கட்சி எம்.எல்.ஏ., ஜெய்கிருஷண் படேல், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால், இந்த எண்ணிக்கை 198 ஆக மேலும் குறையும்.
தொடரும் இடையூறுகள்
ராஜஸ்தான் சட்டசபையின் புதிய கட்டடத்தை, 2001 பிப்., 25ல், அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் திறந்து வைப்பதாக இருந்தது.
ஆனால் அவரது உடல்நலக் குறைவால், விழா ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து முறையான திறப்பு விழா இல்லாமல், சட்டசபை செயல்பட துவங்கியது. தொடர்ந்து, 2001 நவ., இறுதியில், பெயரளவுக்கு திறப்பு விழா நடந்தது. அப்போதிருந்தே இந்த இடையூறுகள் தொடர்கின்றன.
பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக இருந்த போதும், கீர்த்தி குமாரி, தரம்பால் சவுத்ரி போன்ற தலைவர்கள் உயிரிழந்ததால், சட்டசபையில் முழு பலம் எட்டப்படவில்லை.
காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் தலைமையிலான முந்தைய அரசிலும், மரணங்கள், தகுதியிழப்புகள் காரணமாக சட்டசபையில் காலி இடங்கள் உருவாகின. தற்போது, முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான ஆட்சியிலும், அதே போக்கு தொடர்கிறது.
புனித நீர் தெளிப்பு
இறுதியாக, 2024 நவம்பரில், முழு பலமான 200 எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை சட்டசபை எட்டியது. ஆனால், பா.ஜ.,வைச் சேர்ந்த கன்வர் லால் மீனா பதவியை இழந்ததால், 199 ஆக குறைந்துள்ளது.
ராஜஸ்தான் சட்டசபை வளாகத்தை ஒரு தீயசக்தி சூழ்ந்திருப்பதாக, முன்னாள் மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் நம்புகின்றனர்.
சட்டசபை அமைந்துள்ள நிலம், ஒரு காலத்தில் தகன மைதானமாகவும், கல்லறையாகவும் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த அச்சத்தை போக்க, கடந்தாண்டு டிசம்பரில், சட்டசபை வளாகத்தில் ஸ்வஸ்தி வச்சன் மற்றும் மங்களாச்சரண் உள்ளிட்ட வேத சடங்குகளை சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி ஏற்பாடு செய்தார். சட்டசபை வளாகத்தை சுற்றி புனித நீர் தெளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வாஸ்து சாஸ்திரத்தின்படி, அலுவலக அமைப்புகளை அரசு அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். இனி வரும் காலங்களில், ராஜஸ்தான் சட்டசபை எப்போதும் முழு பலத்துடன் செயல்படும் என, அனைவரும் நம்புகின்றனர்.
'குழு புகைப்படம் சமயங்களில்கூட, அனைத்து எம்.எல்.ஏ.,க்களையும் ஒன்றாக பார்ப்பது அரிது. 200 இருக்கைகள் இருந்தாலும், அவை ஒருமுறை கூட நிரப்பப்படவில்லை' என, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -