தலைமறைவாக உள்ள நக்சல்கள் துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு
தலைமறைவாக உள்ள நக்சல்கள் துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு
ADDED : நவ 24, 2024 10:59 PM

சிக்கமகளூரு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தலைமறைவாக வசிக்கும் நக்சல்கள் குறித்து, துப்பு கொடுப்போருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக நக்சல் தடுப்பு படையினர் அறிவித்துள்ளனர்.
சிக்கமகளூரின், கொப்பா சிருங்கேரி எல்லைப் பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக, தகவல் வெளியானது. எனவே நக்சல் தடுப்பு படையினர், அங்கு சென்று தேட துவங்கினர். வனப்பகுதி கிராமத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
வனப்பகுதியில் முகாமிட்டு, தொடர்ந்து தேடி வந்தனர். இம்மாதம் 11ம் தேதி, கொப்பா எல்லையில் உள்ள சுப்பகவுடா என்பவரின் வீட்டுக்கு, நக்சல்கள் லதா, ஜெயண்ணா உட்பட நான்கு பேர் வந்துள்ளதாக, தகவல் கிடைத்தது. நக்சல் தடுப்பு படையினர், அங்கு சென்றனர்.
போலீசாரை கண்டதும், நால்வரும் வீட்டில் இருந்து தப்பி, வனத்துக்குள் புகுந்து கொண்டனர்.
அந்த வீட்டில் சோதனை நடத்தி, மூன்று துப்பாக்கிகள், வெடி மருந்துகளை கைப்பற்றினர். நக்சல்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூவரிடம், விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய நால்வர் மட்டுமின்றி, மேலும் நான்கு நக்சல்களும் வனப்பகுதியில் மறைந்துள்ளனர். 13 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சிக்கமகளூரின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வந்து செல்ல வாய்ப்புள்ளதால், கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். நக்சல்கள் பற்றி துப்பு கொடுத்தால், 5 லட்சம் ரூபாய் பரிசு அளிப்பதாக, போலீசார் அறிவித்துள்ளனர்.
'தகவல் கொடுப்போர் பற்றிய தகவல்கள், ரகசியமாக வைக்கப்படும்' என, உறுதி அளித்துள்ளனர். தேடுதலையும் நிறுத்தவில்லை.