ADDED : அக் 18, 2024 02:21 PM

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்ற 2வது நாளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சியமைந்த 2வது நாளில் பீகாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று காலை சாலையோரம் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஒரு சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ அதிகாரிகளும், ஜம்மு காஷ்மீர் போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ராணுவ வீரர் ஒருவரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள், அவரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து, மக்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.