மரபணு மாற்ற அரிசி சட்டவிரோதம்; அரசுக்கு எதிராக வலுக்கும் குரல்
மரபணு மாற்ற அரிசி சட்டவிரோதம்; அரசுக்கு எதிராக வலுக்கும் குரல்
ADDED : மே 06, 2025 12:26 AM

புதுடில்லி: பெருநிறுவன, 'லாபி'களின் அழுத்தத்தால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை அரிசியை மத்திய அரசு வெளியிட்டுஉள்ளதாக மரபணு மாற்றத்துக்கு எதிரான கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.
'டிஆர்ஆர் தன் - 100 மற்றும் புசா டிஎஸ்டி ரைஸ் - 1' என்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரண்டு வகை அரிசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார்.
அரசுக்கு கண்டனம்
பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளவும், அரிசி விளைச்சலை, 30 சதவீதம் வரை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.
மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களால் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக வாதிடும், மரபணு மாற்றத்துக்கு எதிரான கூட்டமைப்பு அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெருநிறுவன லாபிகளின் அழுத்தத்தால் மத்திய அரசு சட்டவிரோதமான செயல்களைச் செய்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. மரபணு மாற்ற தொழில்நுட்பத்தில் உள்ள ஆபத்து குறித்து ஏராளமான அறிவியல்பூர்வ சான்றுகள் உள்ளன.
இந்த மரபணு மாற்றப்பட்ட அரிசி வகைகள் நாட்டின் பன்முகத்தன்மை உடைய அரிசி மரபணு தொகுப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது. எந்தவித பாதுகாப்பு பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமல் இந்த அரிசி வகைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அறிவுசார் சொத்துரிமை உடைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதால், விவசாயிகளின் விதை இறையாண்மையில் அரசு சமரசம் செய்துள்ளது. இந்த புதிய வகை அரிசியின் அறிவுசார் சொத்துரிமை குறித்த வெளிப்படைத்தன்மையை அரசு வெளியிட வேண்டும்.
நீதிமன்ற அவமதிப்பு
இந்த அரிசி வகைகளில் செய்யப்பட்ட பாதுகாப்பு சோதனை விபரங்களை அரசு வெளியிட வேண்டும். பொதுநலனுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் நிரூபிக்க வேண்டும்.
மரபணு மாற்ற உணவுப் பொருட்கள் தொடர்பாக, 2024 ஜூலையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு மீறியுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.