டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒரு தமிழர் பதவியேற்பு
டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒரு தமிழர் பதவியேற்பு
ADDED : ஜன 08, 2025 12:03 PM

புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக அஜய் திக்பால் மற்றும் ஹரீஷ் வைத்தியநாதன் சங்கர் என்ற தமிழரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விபு பாக்ரூ பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நீதிபதியாக பதவியேற்ற அஜய் திக்பால் சுமார் 31 வருடங்களாக வக்கீலாக பலவிதமான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். 51 வயதை எட்டும் நீதிபதி ஹரீஷ் வைத்தியநாதன் சங்கரின் பூர்வீகம் தமிழகத்தின் பொள்ளாச்சி. ஏற்கெனவே பொள்ளாச்சியைச் சேர்ந்த நீதிபதி கே.வி. விஸ்வநாதன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப் படிப்பை டில்லியில் முடித்த ஹரீஷ், இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பை முடித்தார். உச்ச நீதிமன்றம் உட்பட நாட்டின் பல உயர்நீதிமன்றங்களில் பல வழக்குகளுக்காக ஆஜராகி வாதிட்டுள்ளார். நாட்டின் பிரபல வக்கீல்களான சோலி சொரப்ஜி, கே.கே. வேணுகோபால், சி.எஸ். வைத்தியநாதன் உட்பட பல சீனியர்களிடம் பணிபுரிந்துள்ளார்.
நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பாக மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். அயோத்தியா வழக்கு, கோத்ரா கலவரம், ராணுவம் மற்றும் கடற்படை தொடர்பான வழக்குகள், எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிப்பு என என்னற்ற வழக்குகளில் ஆஜராகியுள்ளார். இவர் பிரபல உச்சநீதிமன்ற சீனியர் வக்கீல் சி.எஸ். வைத்தியநாதனின் மகன். நீதிபதி ஹரீஷுக்கு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி எழுத படிக்க நன்றாக தெரியும்.