பொய் புகார் அளித்து சிறையில் தள்ளிய முன்னாள் காதலி மீது வாலிபர் புகார்
பொய் புகார் அளித்து சிறையில் தள்ளிய முன்னாள் காதலி மீது வாலிபர் புகார்
ADDED : ஜன 29, 2024 07:10 AM
ராஜராஜேஸ்வரி நகர்: பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, தன்னை சிறைக்கு அனுப்பிய முன்னாள் காதலி மீது, வாலிபர் புகார் செய்துள்ளார்.
பெங்களூரின் ராஜராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் ஷெர்வின், 30. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, கோனனகுன்டேவில் வசிக்கும், மென்பொறி நிறுவனத்தில் பணியாற்றும் சிந்துாரி மானே, 28, அறிமுகமானார். நாளடைவில் இருவரும் காதலித்தனர். சில நாட்களுக்கு முன்பு, சிந்துாரி மானே தனக்கு 20 லட்சம் ரூபாய் வேண்டும் என, ஷெர்வினுக்கு நெருக்கடி கொடுத்தார். இதனால் சிந்துாரி மானேவை விட்டு ஷெர்வின் விலக ஆரம்பித்தார்.
கோபமடைந்த சிந்துாரி, தன்னை ஏமாற்றியதாக வீட்டினரிடம் கூறி, பொய் வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டினார். இதனால் பயந்த ஷெர்வின், இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்தார்.
மேலும் பணம் கேட்டு மிரட்டியதுடன், தன்னை காதலித்து ஏமாற்றியதாக ஷெர்வின் மீது, பொய்ப்புகார் செய்தார். இதன் அடிப்படையில் இவரை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானார். இவரை தொடர்பு கொண்ட சிந்துாரி மானே, மீண்டும் 18 லட்சம் ரூபாய் கேட்டு தொந்தரவு கொடுத்தார்.
இதனால் வெறுப்படைந்த ஷெர்வின், ஆர்.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதன்படி சிந்துாரி மானே, அவரது கூட்டாளிகள் மஞ்சுநாத், சாகர் ஆகியோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.