தாறுமாறாக ஓடிய கார் மோதி வாலிபர் பலி; 2 பேர் காயம்
தாறுமாறாக ஓடிய கார் மோதி வாலிபர் பலி; 2 பேர் காயம்
ADDED : டிச 01, 2025 05:55 AM

புதுடில்லி: தாறுமாறாக ஓடிய, 'பென்ஸ்' கார் மோதி ஆட்டோவுக்காக காத்திருந்த வாலிபர் உயிரிழந்தார். காயம் அடைந்த இரண்டு வாலிபர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல, நரேலாவில் அதிவேகமாக வந்த கார், மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
புதுடில்லி கரோல்பாக் பகுதியைச் சேர்ந்தவர் சிவம், 29. மனைவி மற்றும் அண்ணனுடன் நேற்று முன் தினம் மாலை, பென்ஸ் காரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
நேற்று அதிகாலை வீடு திரும்பினார். வசந்த் கஞ்ச் நெல்சன் மண்டேலா சாலையில் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு வரும்போது, சிவம் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடியது. ஆம்பியன்ஸ் வணிக வளாகம் அருகே ஆட்டோவுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதிய கார் கவிழ்ந்தது.
காயம் அடைந்த உத்தராகண்ட் மாநிலம் சமோலியைச் சேர்ந்த ரோஹித், 23, மற்றும் 35, 23 வயதுடைய மூன்று வாலிபர்களும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செ ல்லப்பட்டனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ரோஹித் இறந்து விட்டதை உறுதி செய்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த போலீசார், சிவத்தை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய கார், சிவத்தின் நண்பர் அபி ஷேக் என்பவருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மற்றொறு விபத்து வடக்கு டில்லி நரேலா- - பாவானா சாலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அதிவேகமாக வந்த கார், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது.
அங்கிருந்த மக்கள் காரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த, 5 பேரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில், ஜோதி, 21, என்பவர் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர்.
காயமடைந்த பி ரசாந்த், 22, அமித், 24, 22 வயது பெண், 21 வயது பெண் மற்றும் ஆறு மாத பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

