நாடு முழுதும் முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கர சதி!
நாடு முழுதும் முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கர சதி!
UPDATED : நவ 13, 2025 11:38 PM
ADDED : நவ 13, 2025 11:32 PM

புதுடில்லி : நாடு முழுதும் உள்ள முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, 32 கார்களை வாங்கி, அவற்றை, 'வெடிகுண்டு கார்'களாக மாற்ற முயற்சித்த திடுக்கிடும் தகவலும், டில்லி செங்கோட்டை தாக்குதல் தொடர்பான போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 'டில்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்' என, மத்திய அரசு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
பெண் டாக்டர்
'ஹூண்டாய் ஐ20' காரை ஓட்டிச் சென்று வெடிக்கச் செய்த டாக்டர் உமர் நபி உயிரிழந்த நிலையில், கைதான டாக்டர்கள் ஆதில், முஸாம்மில் அகமது, பெண் டாக்டர் ஷாஹீன் சயீது உள்ளிட் டோரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பாபர் மசூதி இடிப்புக்கு பழிவாங்கும் விதமாக டிச., 6ம் தேதி, டில்லியில் ஆறு இடங்கள் உட்பட நாடு முழுதும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கர சதித் திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது.
இதற்காக, 32 கார்களை வாங்கி, அவற்றை வெடிகுண்டு கார்களாக மாற்ற, 2,900 கிலோ வெடி பொருட்களை பயங்கரவாதிகள் பதுக்கி வைத்தனர்.
டாக்டர்கள் ஆதில், முஸாம்மில் அகமது, பெண் டாக்டர் ஷாஹீன் சயீது, இவர்களை மூளைச் சலவை செய்த முக்கிய சதிகாரனான இமாம் இர்பான் அகமது ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால், பயங்கரவாதிகள் தீட்டிய இந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இதனால், பதற்றம் அடைந்த பரிதாபாத் டாக்டர் உமர், 'ஹூண்டாய் ஐ20' காரை ஓட்டிச் சென்று டில்லி செங்கோட்டையில் வெடிக்கச் செய்தார்.
செங்கோட்டையின் பார்க்கிங் பகுதியில் அந்த காரை நிறுத்தி விட்டு, பயங்கர உயிர் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது முதற்கட்ட திட்டமாக இருந்தது என கூறப்படுகிறது.
பறிமுதல்
தாக்குதல் நடத்த முடிவெடுத்த 10ம் தேதி, திங்கள் கிழமை என்பதால் செங்கோட்டையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், அந்த திட்டத்தை மாற்றி, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சிக்னலில் உமர் காரை வெடிக்க வைத்ததாக தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்த தயார் செய்து வைத்திருந்த கார்களில், அல் பலாஹ் பல்கலை அருகே நிறுத்தப்பட்டிருந்த எச்.ஆர்.87 யு 9988 என்ற பதிவெண் கொண்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே போல் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள கண்டாவாலி கிராமத்தில் இருந்து, டி.எல்.10 சி.கே. 0458 என்ற பதிவெண் கொண்ட சிவப்பு நிற 'ஈகோ ஸ்போர்ட்' காரும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த காரின் பின் இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத இளைஞரை, காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சதித்திட்டம்
இதுதவிர, 'மாருதி டிசைர்' காரும் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த துப்பாக்கி மற்றும் வெடி பொருட் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
டில்லி செங்கோட்டை தாக்குதல் தொடர்பாக கைதான பயங்கரவாதிகள், காஷ்மீரின் புல்வாமாவில் நடந்தது போலவே, மிகப் பெரிய சதிச் செயலை அரங்கேற்றவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
கார் வெடிகுண்டுகளை தயாரித்து காஷ்மீரில் வெடிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியிருந்தனர். புல்வாமாவில் நடந்தது போல அந்த தாக்குதல் இருக்க வேண்டும் என அவர்கள் எண்ணி இருந்தனர். டாக் டர் முஸாம்மில் கைதான தும், பயங்கரவாதிகளின் திட்டம் தவிடுபொடியானது.
இதனால், ஆவேசமும், பதற்றமும் அடைந்த உமர், செங்கோட்டையில் தனியே சென்று தாக்குதல் நடத்தினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

