ADDED : ஜன 20, 2025 07:13 AM

பல்லாரி மாவட்டம், சிறுகுப்பாவின் ஷானவாஸ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷம்ஷத் பேகம். தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இது என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம்.
போதிய பருவமழை, பராமரிப்பின்றி விளைச்சல் இல்லாமல் இருக்கும் தரிசு நிலத்தில், கலப்பு விவசாயம் செய்து சாதித்து வருகிறார். 10 ஏக்கர் நிலத்துக்கு இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைத்து உள்ளார். அத்திப்பழம், பீன்ஸ், புளிய மரங்கள், எலுமிச்சை புல், சீத்தாப்பழம் பயிர்கள் பயிரிட்டுள்ளார்.
மேலும், 160 தென்னை மரங்கள், 15 மா மரங்கள், 60 மூங்கில், 15 பலா மரங்கள், 30 தேக்கு மரம், 15 சந்தன மரம், 200 டிராகன் பழ செடிகள் என அனைவரும் வியக்கும் வகையில் கலப்பு பயிர்களாக சாகுபடி செய்கிறார்.
இது குறித்து ஷம்ஷத் பேகம் கூறியதாவது:
இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட பீன்சில் முதல் அறுவடையில் 600 கிலோ மகசூல் கிடைத்தது. இதன் மூலம், 30,000 ரூபாய் லாபம் கிடைத்தது. அடுத்த பயிரில் முழு லாபம் கிடைக்கும்.
அத்திப்பயிரின் சராசரி மகசூல், 15 பெட்டிகள். 400 ரூபாய் கொண்ட ஒரு பெட்டி வீதம், ஒரு நாளைக்கு 6,000 ரூபாய் கிடைக்கிறது.10 ஏக்கர் நிலத்தை சுற்றிலும், மூங்கில், தென்னை, புளி, வேம்பு, நுங்கு, டிராகன் பழ செடிகள் வளர்க்கிறோம். இங்கு விளையும் பயிர்களை, தினமும் ஏ.பி.எம்.சி.,யில், 3,000 முதல் 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.
கோழி, ஆடுகளை வளர்க்கும் எண்ணமும் உள்ளது. மின்சார இணைப்பு கிடைத்தவுடன், விரைவில் அதையும் துவங்கி விடுவோம்.
ஒரே விளைச்சலை நம்பி இருக்காமல், கலப்பு விளைச்சல் பயிரிடுவதால், ஒன்று கைவிட்டாலும், மற்றொரு நம்மை காப்பாற்றும். ஆனாலும் இதுவரை கலப்பு விளைச்சல் எங்களை கைவிட்டதில்லை. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தரிசு நிலத்தில் கலப்பு விவசாயத்தில் சாதித்த ஷம்ஷத் பேகம், 2024 - 25ம் ஆண்டுக்கான சிறந்த விவசாயி என்ற விருதை பெற்றுள்ளார். விவசாயத்தில் இவருக்கு உறுதுணையாக மகன் அகமது பாஷாவும் உதவுகிறார். - நமது நிருபர் -