விபத்தில் மகனை இழந்த பெண் போலீசுக்கு சரமாரி கேள்வி
விபத்தில் மகனை இழந்த பெண் போலீசுக்கு சரமாரி கேள்வி
ADDED : செப் 20, 2024 08:34 PM
குருகிராம்:சாலை விபத்தில் மகனை இழந்த பெண், 'போலீஸ் ஏன் எங்களுக்கு உதவி செய்யவில்லை?' என, கேள்வி எழுப்பினார்.
துவாராகாவில் வசித்தவர் அக்ஷத் கார்க்,22. கடந்த 15ம் தேதி, குருகிராம் டி.எல்.எப்., இரண்டாவது செக்டார் கோல்ப் கோர்ஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய மஹிந்திரா கார் டிரைவர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அக்ஷத் கார்க் தாயார் நேற்று கூறியதாவது:
காரை தவறான வழியில் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தி என் மகனைக் கொன்ற டிரைவருக்கு ஏன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. என் மகன் சாவுக்கு நீதி வேண்டும். எந்தத் தவறும் செய்யாத என் மகன் இறந்து விட்டான். ஆனால், இறப்புக்கு காரணமானவர் ஜாமினில் வந்து நிம்மதியாக தூங்குகிறார். போலீஸ் ஏன் எங்களுக்கு உதவி செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்க்கின் பைக்கில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவான் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கார்க் தன் பைக்கில் செல்லும் போது, மஹிந்திரா கார் ஒருவழிப்பாதையில் திடீரென வந்து பைக் மீது அசுர வேகத்தில் மோதுகிறது. தூக்கி எறியப்பட்ட கார்க், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழக்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்த ஏராளமானோர் விபத்து ஏற்படுத்தியவரையும், அவருக்கு ஜாமின் வழங்கிய போலீசுக்கும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.