2 முறை மணமான பெண்ணுக்கு 3வது திருமணம் செய்து மோசடி
2 முறை மணமான பெண்ணுக்கு 3வது திருமணம் செய்து மோசடி
ADDED : ஜன 06, 2025 03:42 AM

பாகல்கோட்: ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து கொண்ட பெண்ணை, ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து இடைத்தரகர் மோசடி செய்துள்ளார்.
பாகல்கோட் முதோல் நகரில் வசிப்பவர் சோமசேகர், 38. இவர் பல ஆண்டுகளாக திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் சோர்வடைந்தார். ஓராண்டுக்கு முன் இடைத்தரகர்கள் சிலர், இவரை தொடர்பு கொண்டு திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதாக கூறினர். 4 லட்சம் ரூபாய் தர வேண்டும் என பேரம் பேசினர்; சோமசேகரும் சம்மதித்தார். அதன்பின் இடைத்தரகர்கள், ஷிவமொக்காவை சேர்ந்த மஞ்சுளா, 30, என்பவரை முதோல் நகரின் காளிகாம்பா கோவிலில், சோமசேகருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவரிடம் 4 லட்சம் ரூபாய் கட்டணம் பெற்று கொண்டு சென்று விட்டனர்.
தாமதமானாலும் தனக்கு திருமணம் நடந்தது என, சோமசேகர் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் திருமணமான ஒரே மாதத்தில் அவரது மனைவி மஞ்சுளா, வீட்டை விட்டு ஓடிவிட்டார். மனைவியை தேடி ஷிவமொக்காவுக்கு சென்ற போதுதான், அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்தது தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சோமசேகர், இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு, தன் பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். அவர்கள் கொடுக்காமல் ஏமாற்றினர். இது குறித்து, முதோல் போலீஸ் நிலையத்தில் சோமசேகர் புகார் அளித்தார். சத்யப்பா, மஞ்சுளா உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
- அமர்நாத் ரெட்டி,  எஸ்.பி., பாகல்கோட்

