/
தினம் தினம்
/
இதப்படிங்க முதல்ல
/
'ஆடு மேய்த்த வாலிபர்' யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
/
'ஆடு மேய்த்த வாலிபர்' யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
'ஆடு மேய்த்த வாலிபர்' யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
'ஆடு மேய்த்த வாலிபர்' யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி
UPDATED : ஏப் 27, 2025 04:14 PM
ADDED : ஏப் 27, 2025 05:28 AM

கர்நாடகாவின் வடமாவட்டமான பெலகாவியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலால் மக்கள் நொந்து கொண்டு இருக்கும் வேளையில், பெலகாவி ரூரல் பகுதியில், வாலிபர் ஒருவர் ஆட்டை துாக்கி கொண்டு மகிழ்ச்சியாக நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வாலிபரின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்பதை பலரது கேள்வியாக இருந்து இருக்கலாம்.
ஆடு மேய்ப்பு
அவருக்கு கிடைத்த தகவலை கேட்டால், யாருக்காக இருந்தாலும் மகிழ்ச்சி தான் வந்து இருக்கும். ஆம்... அந்த வாலிபர் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஆட்டை துாக்கி கொண்டு நடனமாடினார். யார் அந்த வாலிபர் என்று பார்க்கலாம்.
மஹாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டம் யமகே கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது மனைவி பாலாபாய். இவர்களின் பிரதான தொழில், ஆடு மேய்ப்பது தான்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் உள்ள பெலகாவியின் ரூரல் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்து, ஆடு மேய்க்கும் தொழில் செய்கின்றனர்.
சித்தப்பா மட்டுமின்றி அவரது குடும்பத்தில் பெரும்பாலோனார் ஆடு மேய்க்கும் தொழில் தான் செய்து வருகின்றனர். சித்தப்பா - பாலாபாய் தம்பதியின் மகன் பீரதேவா.
இவர் சமீபத்தில் வெளியான யு.பி.எஸ்.சி., தேர்வில் 551 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இது தான் அவரது அளப்பரிய மகிழ்ச்சிக்கு காரணம்.
௩ முறை தோல்வி
தனது பயணம் குறித்து பீரதேவா கூறியதாவது:
எனது தந்தை சித்தப்பா, எஸ்.எஸ்.எல்.சி., படித்து உள்ளார். ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார். என்னையும், எனது அண்ணன் வாசுதேவாவையும் நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். பல கஷ்டங்களை தாங்கி, எங்களுக்கு கல்வி கிடைக்க செய்தார். தற்போது எனது அண்ணன் வாசுதேவா ராணுவத்தில் உள்ளார்.
சிறுவயதில் இருந்தே ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்பது எனது ஆசை. இதற்கு முன்பு மூன்று முறை யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதி தோல்வி அடைந்து உள்ளேன்; மனம் தளரவில்லை. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் படிப்பேன். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடம் இடைவெளி எடுத்து கொள்வேன்.
தேர்வுக்கு தயாராகும் போது மொபைல் போனை துாரம் வைத்து விட்டேன். மொபைல் பயன்படுத்தினால் கவனம் சிதறிவிடும். எனக்கு கன்னடம், ஆங்கிலம், மராத்தி நன்கு தெரியும். அரசு பள்ளியில் மராத்தி மொழியில் தான் படித்தேன். இன்ஜினியரிங் படிப்பை புனேயில் முடித்து, டில்லி சென்று யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாரானேன். எனக்கு பலர் உதவி செய்தனர்.
அவர்களை ஒருபோதும் மறக்கவே மாட்டேன். பெலகாவியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த பெற்றோருக்கு உதவ வந்த போது தான், யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்ற விஷயம் எனக்கு தெரிந்தது. எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டது எனது தந்தை செய்யும் ஆடு மேய்க்கும் தொழில் தான். இதனால் தான் ஆடுகளை துாக்கி கொண்டு உற்சாகமாக நடனம் ஆடினேன். சிறுவயதில் இருந்து ஆடும் மேய்த்து உள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

