'மண்ணிலே முத்தெடுத்து' விவசாயத்தில் சாதிக்கும் வாலிபர்
'மண்ணிலே முத்தெடுத்து' விவசாயத்தில் சாதிக்கும் வாலிபர்
ADDED : பிப் 10, 2024 11:28 PM

இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலான வாலிபர்கள், கை நிறைய சம்பளம் கிடைக்கும் வேலைக்கு சென்று, வாழ்க்கை வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதில் இருந்து மாறுபட்ட, ஒரு சில வாலிபர்கள், சொந்த தொழில் அல்லது விவசாயம் செய்ய ஆசைப்படுகின்றனர். விவசாயத்திற்காக கை நிறைய சம்பளம் தரும், வேலையை உதறிவிட்டு வந்தவர்களும் உள்ளனர். இவர்களில் ஒருவரை பற்றி பார்க்கலாம்.
பெலகாவியின் ராய்பாக்கை சேர்ந்தவர் ஆஷிஷ் தேஷ்பாண்டே, 32. எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், பெங்களூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வேலையை உதறி தள்ளிவிட்டு, சொந்த ஊருக்கு வந்து, விவசாயம் செய்ய ஆரம்பித்தார். தற்போது விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து ஆஷிஷ் தேஷ்பாண்டே கூறியதாவது:
எனது அண்ணன் அன்ஷுமன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும், எனக்கும் விவசாயம் செய்ய ஆசை இருந்தது.
இதனால் இருவரும் வேலையை உதறிவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தோம். எனது தந்தை கல்யாண் ராவுக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தில், கரும்பு, வாழை பயிரிட்டு உள்ளோம். மா, பப்பாளி, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட மரங்களையும் வளர்த்து வருகிறோம்.
கால்நடைகள் வளர்ப்பிலும் கவனம் செலுத்துகிறோம். எங்களிடம் 50 எருமைகள், 50 கோழிகள் உள்ளன. பால், முட்டைகள் விற்றும் லாபம் ஈட்டுகிறோம். என் தந்தை கல்யாண் ராவ் விவசாயி. அவர் வழிகாட்டுதல் பேரில், விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். நச்சு இல்லாத உணவுப் பொருட்கள் உற்பத்தி என்பதே, எங்கள் குறிக்கோள். நாங்கள் ரசாயன உரங்களை பயன்படுத்துவது இல்லை. இயற்கை உரங்களை பயன்படுத்தி வருகிறோம்.
நிலம் தன் வளத்தை இழக்க கூடாது. விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயத்தின் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
விவசாயம் மீது நம்பிக்கை வைத்து, களம் இறக்கினால் நிச்சயம் வெற்றி தான். இந்த விவசாய நிலத்தில் இதை பயிரிட்டால், நல்ல லாபம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வேலையின்றி இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். விவசாயம் செய்யுங்கள். தன்னிறைவு வாழ்க்கை அடையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -