ஆம் ஆத்மி- - காங்., கூட்டணியால் பா.ஜ.,வுக்கு பாதிப்பு இல்லை பன்சுரி ஸ்வராஜ் திட்டவட்டம்
ஆம் ஆத்மி- - காங்., கூட்டணியால் பா.ஜ.,வுக்கு பாதிப்பு இல்லை பன்சுரி ஸ்வராஜ் திட்டவட்டம்
ADDED : மார் 20, 2024 11:40 PM

புதுடில்லி:“ஆம் ஆத்மி - -காங்கிரஸ் கூட்டணி சுயநல அடிப்படையிலான கூட்டணி. இந்தக் கூட்டணியால் பா.ஜ.,வுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. டில்லியின் 7 லோக்சபா தொகுதிகளையும் பா.ஜ., தக்கவைத்துக் கொள்ளும்,” என, புதுடில்லி தொகுதி பா.ஜ.,வேட்பாளரான பன்சுரி ஸ்வராஜ் கூறினார்.
மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகளும், புதுடில்லி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான பன்சுரி ஸ்வராஜ், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பா.ஜ., கூட்டணி கைப்பற்றும். டில்லியில் ஆம் ஆத்மி - -காங்கிரஸ் கூட்டணியால் பா.ஜ.,வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த 10 ஆண்டுகளாக செய்த வளர்ச்சிப் பணியுடன் மக்களைச் சந்திக்கிறோம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. மாநில ஆட்சியைக் கலைக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவது, ராமர் கோவில் கட்டுவது, சட்டசபை மற்றும் பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் என அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி- - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், சுயநல அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணி நிலைக்காது. சுஷ்மா ஸ்வராஜை தாயாக அடைந்ததற்கு முற்பிறவியில் நான் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவருடைய ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சுயநல அரசியலால் முடங்கிக் கிடக்கும் 'ஆயுஷ்மான் பாரத்' போன்ற மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த கடும் முயற்சி செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

