ADDED : பிப் 07, 2025 10:02 PM
புதுடில்லி:“டில்லி சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கும் நிலையில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான ஓட்டுக்கள் குறித்த 'படிவம் - 17சி' யை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது,”என, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சி தானே ஒரு இணையதளத்தை துவக்கி, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான ஓட்டுக்கள் விவரத்தை பதிவேற்றியுள்ளது.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில், கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவு:
ஆம் ஆத்மியின் இணையதளத்தில் பதிவேற்றியுள்ள 'படிவம் - 17 சி'யில் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் பதிவான வாக்குகளின் அனைத்து விவரங்களும் உள்ளன. இதை, தேர்தல் ஆணையம்தான் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.