நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆம்ஆத்மி வெற்றி: பெரிய சக்தியாக மாறுவோம்: கெஜ்ரிவால் நம்பிக்கை
நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆம்ஆத்மி வெற்றி: பெரிய சக்தியாக மாறுவோம்: கெஜ்ரிவால் நம்பிக்கை
UPDATED : பிப் 17, 2024 02:56 PM
ADDED : பிப் 17, 2024 02:35 PM

புதுடில்லி: டில்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. முன்னதாக, 'பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி கட்சி பெரிய சவாலாக உள்ளது. நாங்கள் பெரிய சக்தியாக மாறுவோம்' என நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதத்தின் போது கெஜ்ரிவால் பேசுகையில் தெரிவித்தார்.
டில்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு ஆதரவாக 54 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தனர். மொத்தம் உள்ள 70 எம்.எல்.ஏ.,க்களில் 54 பேர் ஆதரவாக ஓட்டளித்ததால் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றது. சட்டசபைக்கு வந்திருந்த எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் மட்டும் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஓட்டளித்தார்.
மிகப்பெரிய சவால்
முன்னதாக, நம்பிக்கை ஓட்டெடுப்பு மீதான விவாதத்தின் போது கெஜ்ரிவால் பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வென்றாலும், 2029ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் மூலம் பா.ஜ., இல்லாத தேசத்தை ஆம் ஆத்மி நிச்சயம் உருவாக்கும். பா.ஜ.,வுக்கு ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால் தான் அனைத்து தரப்பிலிருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகிறது.
நாங்கள் பெரிய சக்தியாக மாறுவோம். நீங்கள் என்னை கைது செய்யலாம் ஆனால் எனது நோக்கத்தையும், போராட்டத்தையும் தடுத்து நிறுத்த முடியாது. சட்டசபையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களை வேட்டையாட பா.ஜ., முயற்சிப்பதால் இந்த நம்பிக்கைத் தீர்மானம் தேவைப்பட்டது. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.