'இறந்த பொருளாதாரத்தில்' இது எப்படி சாத்தியம்; இந்தியாவில் ஓராண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட டிரம்ப் நிறுவனம்!
'இறந்த பொருளாதாரத்தில்' இது எப்படி சாத்தியம்; இந்தியாவில் ஓராண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்ட டிரம்ப் நிறுவனம்!
ADDED : ஆக 06, 2025 01:38 PM

புதுடில்லி: 'இறந்த பொருளாதாரம்' என்று டிரம்ப் வசைபாடிய இந்தியாவில், அவரது கட்டுமான நிறுவனம், ஒரே ஆண்டில் 3 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது.
'இந்தியாவின் பொருளாதாரம் இறந்து போய்விட்டது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உளறிக்கொட்டியது, உலகம் முழுவதும் இருக்கும் தொழில் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டபோதும், இந்தியப் பொருளாதாரம் மட்டுமே ஒளிர்ந்து வருவதாக, உலக வங்கி, ஐ.எம்.எப்., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் பாராட்டி வருகின்றன.
அப்படியிருக்கையில், இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் வர்ணித்து இருக்கிறார். அவர் கூறியது அப்பட்டமான பொய் என்பதற்கு, இந்தியாவில் அவரது நிறுவனங்களின் முன்னேற்றமே சாட்சியாக உள்ளது.
இந்திய கட்டுமானத்துறையில் அவரது நிறுவனம் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. கடந்தாண்டு வரை (அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்கும் முன்பு) டிரம்ப் நிறுவனம் இந்தியாவில் ரூ.175 கோடி வருமானம் ஈட்டியிருந்தது. ஆனால், கடந்த 8 மாதங்களாக இந்த நிறுவனம் இந்தியாவில் தங்கள் செயல்பாட்டை அசுர வேகத்தில் விரிவுபடுத்தி வருகிறது.
2024ம் ஆண்டு நவ.5ம் தேதிக்கு பின்னர், (அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு) இதே டிரம்ப் நிறுவனம், த்ரிபேகா என்ற கட்டுமான நிறுவனத்திடம் கைகோர்த்து குர்கான் பகுதியில் 6 கட்டுமான திட்டங்களை கையகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 8 மில்லியன் சதுர அடிக்கு கட்டடங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்திய கட்டுமானத் துறையில் டிரம்ப் நிறுவனம் 2011ல் கால் பதித்தது. கடந்தாண்டு வரை 3 மில்லியன் சதுர அடி மட்டுமே கட்டிய இந்த நிறுவனம், கடந்த ஓராண்டில் மட்டும் 11 மில்லியன் சதுர அடியாக அதிகரித்துள்ளது. இது, கிட்டத்தட்ட மும்முடங்கு வளர்ச்சியாகும். புதிய திட்டங்கள் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை வாய்ப்புகள் டிரம்ப் நிறுவனத்துக்கு இந்தியாவில் உருவாகி உள்ளன.
அண்மைக்கால திட்டங்கள் மூலம் டிரம்ப் கட்டுமான நிறுவனம் பெற்ற வருவாய் என்பது இன்னமும் கணக்கிடப்படவில்லை. ஆனால் கடந்தாண்டை ஒப்பிட்டால் நிச்சயம் அசுர வளர்ச்சி என்கின்றனர் இதை நன்கு அறிந்தவர்கள்.
உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியா இருப்பதும், எந்தவித பொருளாதார ஏற்ற, இறக்கங்களில் கட்டுமானத் துறை சிக்கிக் கொள்ளாததே இதற்கு காரணிகளாக இருக்கின்றன என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.
2023ம் ஆண்டு டிரம்ப் அதிபராக பதவியில் இல்லாத போது, அவரின் நிறுவனத்திடம் கைகோர்த்திருந்த 3 கூட்டாளி நிறுவனங்களின் கட்டுமான ஒப்பந்ததாரர்கள், ஹரியானாவில் நீதித்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிக்கினர். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருப்பது தனிக்கதை.
2011ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக வியாபாரத்தில் இறங்கிய போது, ரோஹன் லேண்ட்ஸ்கேப் என்ற நிறுவனத்துடன் கைகோர்த்து, மும்பையில் உள்ள சவ்பட்டி என்ற இடத்தில் 40 முதல் 60 மாடிகள் கொண்ட கட்டடத்தை கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், விதிகளை மீறி கட்டுமானங்களில் இறங்கியதால் மஹாராஷ்டிரா அரசாங்கம் கட்டுமான அனுமதியை ரத்து செய்தது.

