ADDED : அக் 16, 2024 08:15 PM

புதுடில்லி:டில்லி சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை ஆளும் ஆம் ஆத்மி நேற்று துவங்கியுள்ளது. 'ஜன் சம்பார்க்' எனும் மக்கள் தொடர்பு பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.
டில்லி சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை ஆம் ஆத்மி வென்று, ஆட்சியை பிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அக்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் கலால் கொள்கை ஊழல் வழக்குகளில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கட்சியின் பெரும்பாலான தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளால் கட்சியின் இமேஜுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக உள்ளுக்குள் அவர்கள் கவலைப்படுகின்றனர். இது சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்து, அதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் ஆம் ஆத்மி தலைவர்கள் கவனமாக இருக்கின்றனர்.
கலால் ஊழல் வழக்கை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து பிரசாரம் செய்வர் என்பது ஆளும் கட்சியினருக்கு தெரியும். அதனால் முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை கையிலெடுத்துள்ளனர்.
இதையொட்டி ஆம் ஆத்மி சார்பில் 'ஜன் சம்பார்க்' எனும் மக்கள் தொடர்பு பிரசாரம் நேற்று துவக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய கடிதத்தை, அக்கட்சித் தலைவர்கள் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் அந்தக் கடிதத்தைப் படித்த முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
நான் ஒரு கடிதத்தை தயார் செய்துள்ளேன், எங்கள் கட்சித் தொண்டர்கள், அக்டோபர் 29 வரை இந்தக் கடிதத்துடன் வீடு வீடாகச் செல்வார்கள்.
நான் ஊழல்வாதி இல்லை. டில்லி மக்களுக்கான ஆம் ஆத்மி அரசின் பணிகளைத் தடுக்க பா.ஜ.,வால் சிறைக்கு அனுப்பப்பட்டேன்.
என்னைக் கைது செய்து ஐந்து மாதங்கள் சிறையில் வைத்திருந்தார்கள். நான் உங்களுக்குக் கொடுக்கும் வசதிகளையும் மற்ற வேலைகளையும் தடுக்கவே இப்படிச் செய்தார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.