மக்கள் பிரச்னைகளை புறக்கணிக்கிறார் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.எல்.ஏ., விலகல்
மக்கள் பிரச்னைகளை புறக்கணிக்கிறார் கெஜ்ரிவால்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.எல்.ஏ., விலகல்
UPDATED : டிச 10, 2024 10:20 PM
ADDED : டிச 10, 2024 10:18 PM

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டில்லி எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
டில்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள ஆளும் ஆம் ஆத்மி, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்டவை மும்முரமாக தயாராகி வருகின்றன. அதேபோல், கட்சி தாவலும் நடந்து வருகிறது. டில்லி அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் பதவியை ராஜினாமா செய்தும், கட்சியில் இருந்தும் விலகி பா.ஜ.,வில் இணைந்தார். சீமாபுரி தொகுதி எம்.எல்.ஏ., ஆக இருந்த ராஜேந்திர பால் கவுதம் ஆம் ஆத்மியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் காங்கிரசில் இணைந்தனர்.
இந்நிலையில் டில்லியின் ஷீலம்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அப்துல் ரெஹ்மான் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். அதிகார அரசியலுக்காக முஸ்லிம்களின் உரிமைகளை ஆம் ஆத்மி புறக்கணிக்கிறது. கெஜ்ரிவால் எப்போதும் மக்களின் பிரச்னைகளில் இருந்து விலகி அரசியல் செய்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் காங்கிரசில் இணைந்தார்.