ஆயுத போராட்டத்தை கைவிட்டு சரணடையுங்கள்: தீவிர நக்சல்களுக்கு முன்னாள் நிர்வாகி கோரிக்கை
ஆயுத போராட்டத்தை கைவிட்டு சரணடையுங்கள்: தீவிர நக்சல்களுக்கு முன்னாள் நிர்வாகி கோரிக்கை
ADDED : நவ 02, 2025 12:28 AM
கட்சிரோலி: ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு மக்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு தீவிரமாக நக்சல் இயக்கத்தில் செயல்படுபவர்களுக்கு சரணடைந்த நக்சல் இயக்க நிர்வாகி வேணுகோபால் ராவ் என்ற பூபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பான மக்கள் போர் குழு நிறுவன உறுப்பினரான பூபதி, மஹாராஷ்டிரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல் இயக்கத்தை தீவிரமாக பரப்ப உழைத்தவர்.
இவர் தன் ஆதரவாளர்கள், 60 பேருடன் கடந்த மாதம், 14ல் கட்சிரோலி போலீசில் சரணடைந்தார். சி.பி.ஐ., நக்சல் இயக்கத்தின் மத்திய மண்டல செயலர் மற்றும் அரசியல் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்த இவர், தீவிர நக்சல்கள் சரண் அடைந்து மக்கள் பணியாற்ற வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பூபதியின் வீடியோ பதிவை கட்சிரோலி போலீசார் நேற்று வெளியிட்டனர். அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:
நக்சல் இயக்கத்தில் இருந்து வெளியேறி மக்கள் பணியாற்ற விரும்புவோர் என்னையோ அல்லது ஏற்கனவே சரண் அடைந்துள்ள தோழர் ரூபேஷை, 'மொபைல் போன்' மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரத்தையும் நிலத்தையும் கைப்பற்ற தற்போது கையில் எடுத்துள்ள ஆயுதப்போராட்டத்தை கைவிடுங்கள். அது தோல்வி அடைந்த பாதை என நிரூபணம் ஆகியுள்ளது. அது மக்களிடம் இருந்து நம்மை வெகுதொலைவுக்கு அழைத்து சென்றுவிட்டது.
எனவே தீவிர நக்சல்கள் வன்முறையை கைவிட்டு சரண் அடையுங்கள். இதன் மூலம் மக்களுடன் இணைந்து பணியாற்றலாம். என்னையும் சரணடைந்த மற்ற நக்சல்களையும் துரோகிகள் என அழைப்பவர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
ஏன் சரணடைய வேண்டும் என்று சரணடைந்த ரூபேஷ் விளக்கம் அளித்துள்ளார். எனவே நான் அதை விளக்கப்போவதில்லை. எனவே ஜனநாயகத்தை விரும்புவோர், பழங்குடியினருக்கு உதவ விரும்புவோர் ஆயுதங்களை கைவிட்டு சட்டப்படி செயல்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

