தனிநபர் மொபைல் போன் தகவல்கள் திருட்டு கேரள இளைஞர் கைது
தனிநபர் மொபைல் போன் தகவல்கள் திருட்டு கேரள இளைஞர் கைது
ADDED : நவ 02, 2025 12:27 AM
பத்தனம்திட்டா: போலீஸ் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே அணுக அனுமதி பெற்ற தனிநபர், 'மொபைல் போன்' அழைப்பு மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்களை, 'ஹேக்கிங்' முறையில் திருடிய கேரள இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
கேரள மாநிலம் ஆடூர் கோட்டமுக்கல் பகுதியைச் சேர்ந்த ஜோயல் ஜோஸ், 23. இவர் கடந்த பிப்ரவரியில் கணினி பாதுகாப்பு விதிகளை மீறி, பலரது மொபைல் போன்களின், 'லைவ் லொக்கேஷன்' எனப்படும், இருப்பிடம் மற்றும் அழைப்பு விபரங்கள் ஆகியவற்றை திருடி அவற்றை பணத்துக்கு விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஜோயலின் மொபைல் போன் மற்றும் லேப்டாப்களை கைப்பற்றி டிஜிட்டல் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அவர் எந்தந்த தளங்களில் நுழைந்து தகவல்களை திருடினார் என்பது அதன் பின் தெரியவரும்.
ஒருவரின் மொபைல் போன் விபரங்களை சட்டபூர்வமாகப் பெறும் அதிகாரம் போலீசாருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் மட்டுமே உள்ளது. இதை தனிநபர் பயன்படுத்துவது கடுமையான குற்றம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

