ADDED : மார் 04, 2024 07:00 AM

உடுப்பி; லோக்சபா தேர்தலில் கீதா சிவராஜ்குமார் போட்டியிட, ஈடிகா சமூக மடாதிபதி பிரணவானந்த சுவாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் சித்தராமையாவின் இரண்டு பட்ஜெட்டிலும், ஈடிகா சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ., ஆட்சியில் எங்கள் சமூகத்தை சேர்ந்த, இரண்டு பேருக்கு அமைச்சர் பதவியும், மூன்று பேருக்கு வாரிய தலைவர் பதவியும் கிடைத்தது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒருவருக்கு அமைச்சர் பதவியும், ஒருவருக்கு வாரிய தலைவர் பதவியும் மட்டுமே கிடைத்து உள்ளது. எங்கள் சமூகத்தை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கும் முயற்சி நடக்கிறது.
பெங்களூரில் பிரம்மஸ்ரீ நாராயணகுரு சிலை அமைக்கப்பட வேண்டும். ஈடிகா சமூக வளர்ச்சிக்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 20 ம் தேதி முதல் பெங்களூரில் காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
மறைந்த ராஜ்குமார் மனது வைத்திருந்தால் அவரால், கர்நாடகாவின் முதல்வர் ஆகியிருக்க முடியும். ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
அவரது குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர விரும்பவில்லை. ஆனால் ராஜ்குமாரின் மருமகள் கீதா சிவராஜ்குமார், அரசியலுக்கு வர விரும்புகிறார். ஷிவமொகா தொகுதியில் போட்டியிட நினைக்கிறார். அவர் தேர்தலில் போட்டியிட கூடாது. அப்படி போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கீதாவை எம்.பி., ஆக பார்க்க வேண்டும் என்று, அவரது கணவரும், நடிகருமான சிவராஜ்குமார் கூறி இருந்தார். இந்நிலையில் கீதா போட்டியிட, மடாதிபதி எதிர்ப்பு தெரிவித்து இருப்பது, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

