பஞ்சாயத்து உறுப்பினர்கள் கடத்தல் தலைவர் தேர்தல் முடிவு நிறுத்திவைப்பு
பஞ்சாயத்து உறுப்பினர்கள் கடத்தல் தலைவர் தேர்தல் முடிவு நிறுத்திவைப்பு
ADDED : ஆக 17, 2025 01:22 AM
நைனிடால்: உத்தராகண்டில் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஐந்து உறுப்பினர்கள் கடத்தப்பட்டதை அடுத்து, நைனிடால் பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகளை, அந்த மாநில உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
உத்தராகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
பதற்றம் இங்குள்ள நைனிடாலில், பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. அம்மாநில உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 31ம் தேதி தேர்தல் நடந்தது.
இரண்டாம் கட்டமாக, பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல், கடந்த 14ம் தேதி நடந்தது.
உள்ளாட்சி தேர்தலில் வென்ற உறுப்பினர்கள், புதிய தலைவர் மற்றும் துணைத் தலைவர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நைனிடாலில் பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்த நிலையில், ஒருசில இடங்களில் வன்முறை வெடித்தது. பேடல்கட் ஓட்டுச்சாவடியில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., உறுப்பினர்கள் இடையே மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, வன்முறை கட்டுக்குள் வந்தது. இந்த விவகாரத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேசமயம், நைனிடாலின் மால் சாலையில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த ஐந்து காங்கிரஸ் ஆதரவு உறுப்பினர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டனர்.
பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கடத்தல் சம்பவம் குறித்து, மாயமான உறுப்பினர்களின் குடும்பத்தார் போலீசில் புகாரளித்ததை அடுத்து, அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
இதற்கிடையே, பிற பகுதிகளில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்வு செய்ய பதிவான ஓட்டுகள், 14ம் தேதி இரவு எண்ணப்பட்டன.
பஞ்சாயத்து உறுப்பினர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக, உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி நாகேந்திரா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, 'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை சரியாக இல்லையா, உறுப்பினர்கள் கடத்தலில் போலீசாருக்கு பங்கு இருக்கிறதா? காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டியது போலீசாரின் பொறுப்பு' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஓட்டுப்பதிவு அப்போது, மாவட்ட தேர்தல் அதிகாரி வந்தனா கூறுகையில், “பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.
இதுவரை பதிவான ஓட்டுகள், 14ம் தேதி இரவே எண்ணி முடிக்கப்பட்டன. முடிவுகள் சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது,” என்றார்.
இதையடுத்து, ஐந்து உறுப்பினர்களை கண்டுபிடிக்கும் வரை தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.