32 வார கருவை சுமக்கும் 15 வயது சிறுமி: அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
32 வார கருவை சுமக்கும் 15 வயது சிறுமி: அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ADDED : ஜூலை 27, 2024 02:44 PM

லக்னோ: பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, 32 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் 15 வயது சிறுமியின் கரு கலைப்பு தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 'கரு கலைப்பு பெண்ணின் முடிவுக்குட்பட்டது' என தீர்ப்பு அளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15வயது சிறுமியின் 32 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறுமி தனது தாய் மாமா வீட்டில் வசித்து வந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சேகர் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கருவை சுமந்து குழந்தையை பெற்று எடுப்பது அல்லது கருவை கலைப்பது சிறுமியின் முடிவை சார்ந்தது. கருவை சுமந்து குழந்தையை சிறுமி பெற்று எடுத்த, பின் அக்குழந்தையை தத்து கொடுக்க விரும்பினால், சிறுமி மற்றும் குழந்தையின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும்.
குழந்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெறுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் சிறுமியின் கருவை கலைத்தால், ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இறுதியில் சிறுமியின் பெற்றோரும் கர்ப்பத்தைத் தொடர ஒப்புக்கொண்டனர்.