ஈரான் உடனான வர்த்தக உறவை அதிரடியாக துண்டித்தது யு.ஏ.இ.,
ஈரான் உடனான வர்த்தக உறவை அதிரடியாக துண்டித்தது யு.ஏ.இ.,
UPDATED : ஆக 19, 2026 11:23 PM
ADDED : ஆக 19, 2026 07:22 PM

துபாய்:ஈரான் உடனான அனைத்து வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை உடனடியாக துண்டித்துக் கொள்வதாக யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்காசிய நாடான ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியது.
இருநாடுகளுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் எட்டப்படாத நிலையில், ஈரானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் நேற்று முன்தினம் ஏவப்பட்டதாக யு.ஏ.இ., ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. ஏவுகணைகளில் ஒன்று நாட்டின் கடல் எல்லைக்கு வெளியேயும், மற்றொன்று எல்லைக்குள் உள்ள கடற்பகுதியிலும் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஈரான் உடனான அனைத்து வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளை உடனடியாக துண்டிப்பதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது.
