ADDED : ஜன 29, 2025 10:36 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, தாய், மகனை வெட்டி கொலை செய்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா போத்துண்டி திருத்தம்பாடம் பகுதியைச் சேர்ந்தவர், லட்சுமி, 76, இவரது மகன் சுதாகரன், 58. இவர், திருப்பூரில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த, 27ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரை, 58, என்பவர், முன்விரோதம் காரணமாக, லட்சுமி, சுதாகரன் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமார், ஏ.எஸ்.பி., ஹரிதாஸ் மற்றும் ஆலத்தூர் டி.எஸ்.பி., முரளிதரனின் மேற்பார்வையில், ஆலத்தூர் இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் தலைமையில் சிறப்புப்படை அமைத்து, குற்றவாளியை தேடினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, செந்தாமரையை போலீசார் கைது செய்தனர்.
எஸ்.பி., அஜித்குமார் கூறியதாவது:
இருவரை கொலை செய்த செந்தாமரை, போத்துண்டி வனத்தினுள் தப்பி சென்று விட்டார். மலையின் உச்சியில் இருந்து கொண்டு, இறந்தவர்களின் உடலை எடுத்து வருவது, போலீசார் தேடுவதை கண்காணித்துள்ளார். பசியெடுத்ததால், நேற்று முன்தினம் இரவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த நேரத்தில் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், செந்தாமரையின் மனைவி பிரிந்து சென்றதற்கு, சுதாகரனின் குடும்பம் காரணம் என்ற சந்தேகத்தில், கடந்த, 2019ல் சுதாகரனின் மனைவி சஜிதாவை கொலை செய்தார். அந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர், சுதாகரனையும், அவரது அம்மா லட்சுமியையும் திட்டமிட்டு கொலை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட செந்தாமரை, ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு, கூறினார்.