அபுதாபி இளவரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
அபுதாபி இளவரசர் இந்தியா வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
ADDED : செப் 08, 2024 08:02 PM

புதுடில்லி : அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அபுதாபி இளவரசருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சையத் அல் நஹ்யான் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் யு.ஏ.இ.,அரசின் அமைச்சர்களும் உடன் வந்துள்ளனர்.
டில்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய அபுதாபி இளவரசரை வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் வரவேற்றார். மேலும் இது குறித்து எக்ஸ் வலை தளத்தில், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளதாவது: அபுதாபி இளவரசர் , முதல் முறையாக இந்தியாவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இது இரு நாடுகளிடையே வரலாற்று உறவின் ஒரு மைல்கல் என பதிவிட்டு உள்ளார்.
எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அபுதாபி இளவரசர் பிரதமர் மோடியை நாளை (திங்கட்கிழமை ) சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து மும்பை செல்லும் இளவரசர் அங்கு தொழில் துறையினரை சந்தித்து பேச உள்ளார்.
2022-23ல் அன்னிய நேரடி முதலீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் முதல் நான்கு முதலீட்டாளர்களில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளது.மேலும் கடந்த ஜனவரி மாதத்தில், ராஜஸ்தானில் இந்தியா-யுஏஇ இருதரப்பினரின் முதல் இராணுவப் பயிற்சியான 'பாலைவன சூறாவளி' நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.