16 ஆண்டுகளாக தொடரும் ஆசிட் வீச்சு வழக்கு; நீதித்துறை நடைமுறையில் கேலிக்கூத்தானது: உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம்
16 ஆண்டுகளாக தொடரும் ஆசிட் வீச்சு வழக்கு; நீதித்துறை நடைமுறையில் கேலிக்கூத்தானது: உச்ச நீதிமன்றம் கடும் விமர்சனம்
ADDED : டிச 05, 2025 09:22 AM

புதுடில்லி: 'ஆசிட் வீச்சு வழக்கு, 16 ஆண்டுகளாக முடிவடையாமல் இருப்பது நீதிமன்ற நடைமுறையில் கேலிக்கூத்தானது; மிகவும் அவமானகரமானது' என, உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
ஆசிட் வீச்சு சம்பவத்தில் உயிர் தப்பிய ஷாஹீன் மாலிக் என்பவர், தன்னை போல பாதிக்கப்பட்ட பெண்களுக்காக உதவி வருகிறார். இதற்காக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை அவர் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2009ம் ஆண்டு என் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டது.முகத்தில் ஆசிட் வீசப்பட்டால் அது மற்றவர்களின் கண்களுக்கு நன்றாக தெரியும். ஏனெனில் அந்த ஆசிட் முகத்தை சிதைத்து கோரமாக மாற்றி விடும்.
ஆனால், உடலுக்குள்ளே ஆசிட் செலுத்தப்பட்டால், வெளி பார்வைக்கு எதுவும் தெரியாது. நான் அதுபோன்ற பாதிப்புக்கு ஆளானேன்.
என்னைப்போல் பாதிக்கப்பட்டவர்கள், ஆரோக்கியமாகவே தெரிவர். உடல் உள் உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பையும், சேதத்தையும் நிரூபிப்பது கடினம். அரசு தரப்பிலும் அவர்களுக்கு போதிய நிவாரணம் கிடைப்பதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மாலிக் மீது நடத்தப்பட்ட ஆசிட் வீச்சு வழக்கு தற்போது எந்த நிலையில் இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கடந்த 16 ஆண்டுகளாக விசாரணை நடப்பதை கேட்டு கடும் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒரு வழக்கு, 16 ஆண்டுகளாக முடியாமல் இருப்பது நம் நீதித்துறை நடைமுறையில் கேலிக்கூத்தானது; அவமானகரமானது. தலைநகர் டில்லியிலேயே இந்த நிலைமை என்றால்; வேறு நகரங்களில் இந்த வழக்குகள் சரியாக கையாளப்படுமா என தெரியவில்லை.
ஆசிட் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்கிறது.
இந்த விவகாரத்தை அனைத்து உயர் நீதிமன்றங்களும் கவனிக்க வேண்டும். இதுவரை தொடரப்பட்ட அனைத்து ஆசிட் வீச்சு வழக்குகளிலும் விரைவாக விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதே போல் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஆசிட் தாக்குதல் வழக்கு விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு அனைத்து உயர்நீதிமன்ற பதிவாளர்களுக்கும் உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

