உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார் புடின்! ஆரத்தழுவி வரவேற்றார் மோடி
உச்சி மாநாட்டில் பங்கேற்க டில்லி வந்தார் புடின்! ஆரத்தழுவி வரவேற்றார் மோடி
UPDATED : டிச 05, 2025 01:59 AM
ADDED : டிச 05, 2025 01:45 AM

புதுடில்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியா - ரஷ்யா இடையே கடந்த 80 ஆண்டுகளாக ஆழமான நட்புறவு நீடித்து வருகிறது. நம் நாட்டின் நெருங்கிய நண்பனாக ரஷ்யா விளங்கி வருகிறது. இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பல்வேறு ஒப்பந்தங்களை இறுதி செய்யவும், ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு நடக்கிறது.

டில்லியில், கடந்த 2021ல் நடந்த ஆண்டு உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவருக்கு ரஷ்ய அதிபர் புடின் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்து உபசரித்தார்.

சிவப்பு கம்பளம்
இதையடுத்து, நடப்பாண்டுக்கான உச்சி மாநாடு, டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரத்யேக, 'இல்லுஷின் இல் 96 - 300 பி.யு.,' விமானத்தில் புறப்பட்டு, நேற்று மாலை 6.35 மணிக்கு புடின் டில்லி வந்தடைந்தார்.
பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்றார். அப்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தனக்கு மாஸ்கோவில் தனிப்பட்ட விருந்து அளித்து உபசரித்தது போல், புடினுக்காக தனிப்பட்ட விருந்துக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவரை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக தன் இல்லத்திற்கு பிரதமர் அழைத்துச் சென்றார்.
அதன்பின், சிறிது நேரம் இரு நாட்டு தலைவர்களும் உரையாடி, தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு இரவு 8.30 மணிக்கு, புடின் புறப்பட்டுச் சென்றார்.
அதிபர் புடினின் அதிகாரபூர்வ இந்திய சுற்றுப்பயணம், இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இருந்து துவங்குகிறது. ரஷ்ய அதிபரை வரவேற்பதற்காக ஜனாதிபதி மாளிகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
முக்கிய ஒப்பந்தங்கள்
சிவப்பு கம்பள வரவேற்புடன் முழு ராணுவ அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்படஉள்ளது.
அதன்பின் அங்கிருந்து டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புடின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அங்கு அரை மணி நேரம் வரை அவர் செலவிடுவார் என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் துவங்கும் உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டிற்கு பின், பிரதமர் மோடி அவருக்கு ஹைதராபாத் இல்லத்திலேயே மதிய விருந்து அளிக்கிறார். அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்துகின்றனர்.
குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து ஆண்டுக்கு, 5.84 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்தியா பொருட்களை இறக்குமதி செய்து வருகிறது. அதேபோல் இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு, 45,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து இந்த பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது.
மேலும், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் உரங்களை இறக்குமதி செய்ய நம் நாடு மும்முரம் காட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் டன் அளவுக்கு ரஷ்யா நமக்கு உரங்களை சப்ளை செய்து வருகிறது.
ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய பொருளாதார யூனியனுடன் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் - 400' ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கூடுதலாக கொள்முதல் செய்வது குறித்த பேச்சுகளும் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி விருந்து
ஆண்டு உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்கிறார். அதன்பின், இன்று இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ செல்கிறார்.
இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் புடினின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குறிப்பாக ராணுவ ரீதியில் இரு நாட்டுக்கும் இடையே வலுவான நட்புறவு ஏற்படும் என்பதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.



