திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் தமிழக அரசு...மேல்முறையீடு!: இன்று விசாரணை
திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் தமிழக அரசு...மேல்முறையீடு!: இன்று விசாரணை
UPDATED : டிச 05, 2025 12:05 AM
ADDED : டிச 05, 2025 12:00 AM

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் மனு தாக்கல் செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என, ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச., 1ல் உத்தரவிட்டார்.
தீபத் துாண் இந்த உத்தரவை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அதிகாரி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேற்று முன்தினம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.
அதன்படி, இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர் ராம ரவிகுமார் உட்பட 10 பேர், திருப்பரங்குன்றம் மலை உச்சி யில் உள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
'அவர்களுக்கு, மதுரை உயர் நீதிமன்ற கிளை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என குறிப்பிட்டார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி யில் உள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு தடை விதிக்க, கோவில் செயல் அலுவலர் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், நேற்று மதுரை உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில், இவ்வழக்கு நேற்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏற்புடையதல்ல அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் துாணில், கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு பாதுகாப்பாக, மத்திய பாதுகாப்பு படை செல்ல வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் ஏற்புடையதல்ல.
மதுரை உயர் நீதிமன்ற கிளை வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது; வேறு பணி களுக்கு அவர்களை அமர்த்த நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது.
மேலும், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை என்று தாக்கல் செய்யப்படும் அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்ற கிளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விளக்கம் பெற்று ஏதாவது தண்டனை வழங்கலாம்.
அதை விடுத்து, மனுதாரர், வழக்கு தொடர்ந்தவர் மலைக்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல. எனவே, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு வாதாடினார்.
தர்கா தரப்பு பின்னர், மற்றொரு கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ''பல ஆண்டுகளாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறதோ, அதே இடத்தில் தான் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் தனி நபர்கள் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது ஏற்புடையதல்ல,'' என வாதாடினார்.
தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'திருப்பரங்குன்றம் மலையில் தீபத் துாண் என்று கூறப்படும் கல் துாண், அங்குள்ள அளவுகளை குறிப்பது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது, அந்த கல்லில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தது ஏற்புடையதல்ல. வழக்கம்போல உச்சி பிள்ளையார் கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு விட்டது. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என வாதாடினார்.
ராம ரவிகுமார் தரப்பு
இதையடுத்து, தீபத் துாணில் தீபம் ஏற்றும் உத்தரவை நிறைவேற்றுவது சம்பந்தமாக, ராம ரவிகுமார் உள்ளிட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'அரசு தரப்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தான், வழக்கு தொடர்ந்தோம். அதை விசாரித்தே, தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்தார். அதையும் நிறைவேற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது சட்டவிரோதம்' என வாதாடினர்.
இதையடுத்து நீதிபதிகள், 'தனி நீதிபதி உத்தரவை நிறைவேற்றாதது ஏன்? அந்த உத்தரவை நிறைவேற்ற, கோவில் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தான் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது' என தெரிவித்தனர்.
பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதாலேயே, மனுதாரர் ராம ரவிகுமார் உள்ளிட்டவர்களை மலை மீது தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாநில அரசு கடமையை செய்ய தவறியதாலேயே, சி.ஐ.எஸ்.எப்., படையை பாதுகாப்பிற்காக செல்ல உத்தரவிடப்பட்டது.
எனவே, தனி நீதிபதி விசாரணை செய்த அவமதிப்பு வழக்கிற்கு எதிராக, மதுரை கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேல் முறையீடு இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என கேட்பதுதான் பிரச்னை. கார்த்திகை தீபம் ஏற்ற எந்த தடையும் அரசு விதிக்கவில்லை.
'குறிப்பிட்ட இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும்' என, 2014ல் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது. அதை தான் அரசு தரப்பில் பின்பற்றி உள்ளோம். புதிதாக தீபம் ஏற்ற மனுதாரர் ராம ரவிக்குமார் கேட்கும் இடம் தர்கா அமைந்துள்ள இடத்திலிருந்து வெறும் 15 மீட்டர் தொலைவில் உள்ளது. தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே, அங்கு தீபம் ஏற்ற அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக யாரேனும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தால், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
-- நமது நிருபர் -

