நந்திமலையில் சட்டவிரோத விடுதிகள் மீது... நடவடிக்கை!
நந்திமலையில் சட்டவிரோத விடுதிகள் மீது... நடவடிக்கை!
ADDED : அக் 12, 2024 12:28 AM

சிக்கபல்லாபூர் : “அண்டை மாநிலமான கேரளாவின் வயநாட்டை போன்று நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சுற்றுச்சூழல், புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நந்திமலையில் உள்ள சட்டவிரோத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என, சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷாலிடம், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரில் இருந்து 74 கி.மீ., துாரத்தில், சிக்கபல்லாபூர் அருகே நந்திமலை உள்ளது. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலம். பெங்களூரின் ஐ.டி., பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களது நண்பர்களுடன் வார இறுதி நாட்களில் இங்கு வந்து விடுவர். இதனால் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இயற்கை எழில் கொஞ்சம் இடம் என்பதால், வெளிநாடு சுற்றுலா பயணியர் கூட, நந்திமலைக்கு அதிகம் வருகை தருகின்றனர்.
வயநாடு
வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் தங்குவதற்கு வசதியாக, நந்திமலை உச்சியிலும், அடிவாரத்திலும் ஏராளமான தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன.
நந்திமலையில் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும் வகையில், ரோப் கார் சேவையை துவக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
வாகனங்கள் அதிகம் செல்வதால், நந்திமலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சமீப காலமாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் நேற்று முன்தினம் யுனிவர்சல் மனித உரிமைகள் சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் வனத்துறைச் செயலர் யல்லப்ப ரெட்டி பேசுகையில், ''நந்திமலையில் சட்டவிரோத தங்கும் விடுதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
''இது சுற்றுச்சூழல் மீது அழுத்தம் ஏற்படுத்தும். சுற்றுலா பயணியரை கவரும் வகையில் மேற்கொள்ளப்படும் ரோப் கார் திட்டம், வயநாட்டை போன்று நிலச்சரிவு ஏற்பட வழிவகுத்துவிடும்,'' என எச்சரிக்கை விடுத்தார்.
வாழ்வாதாரம்
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் சில சமூக ஆர்வலர்கள் பேசுகையில், 'நந்திமலையில் ஏழு ஆறுகள் உற்பத்தி ஆகின்றன. மலைகளில் இருந்து வரும் தண்ணீர் மருத்துவ குணம் கொண்டதாக மக்கள் நம்புகின்றனர். நந்திமலை அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
''ஆனால் சட்டவிரோத தங்கும் விடுதிகள் அதிகரிப்பால், நந்திமலையின் உறுதித்தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் 11 துறைகளுக்கு புகார் அளித்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.
நந்திமலையின் பாதுகாப்பு குறித்து, சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வரின் கவனத்திற்கும் சிலர் கொண்டு சென்றனர். நந்திமலை அடிவாரத்தில் உள்ள சில கிராமங்களில், சட்டவிரோத தங்கும் விடுதிகள், வில்லாக்கள் செயல்படுவது பற்றி, அவருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சிக்கபல்லாபூர் எஸ்.பி., குஷாலை தொடர்பு கொண்டு, பிரதீப் ஈஸ்வர் பேசினார். “நந்திமலையில் உள்ள சட்டவிரோத விடுதிகள் மீது, நடவடிக்கை எடுங்கள்,” என எஸ்.பி.,யை அவர் கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக பிரதீப் ஈஸ்வர் கூறுகையில், ''நந்திமலையை பாதுகாப்பது மிகவும் அவசியம். சட்டவிரோதமாக செயல்படும் விடுதிகள், வில்லாக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, எஸ்.பி.,யிடம் கூறி உள்ளேன்.
''கலெக்டருக்கும் கடிதம் எழுதுவேன். சட்டவிரோதமாக விடுதிகள் செயல்படுவதில், அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

