நீதிபதியை குற்றவாளியாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை
நீதிபதியை குற்றவாளியாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை
ADDED : ஏப் 15, 2025 02:01 AM

லக்னோ : உத்தர பிரதேசத்தில் திருட்டு வழக்கு விசாரணையின் போது, குற்றவாளி பெயருக்கு பதில் நீதிபதியின் பெயரை ஆவணங்களில் எழுதிய எஸ்.ஐ., மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உ.பி.,யில், 2001ல் நடந்த திருட்டு வழக்கில், குற்றவாளி ராஜ்குமார் என்ற பப்பு போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பிரோஸாபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நக்மா கான், குற்றவாளியை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளித்தார்.
இந்த வழக்கு, கடந்த மாதம் 23ல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரி எஸ்.ஐ., பன்வாரிலால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, குற்றவாளி நக்மா கானை தேடி அவரது வீட்டுக்கு சென்றதாகவும், அவர் வீட்டில் இல்லை என்றும் கூறிய அவர், நக்மா கானுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இதைக் கேட்ட நீதிபதி நக்மா கான் அதிர்ச்சி அடைந்தார். எஸ்.ஐ., தாக்கல் செய்த ஆவணத்தில் குற்றவாளி ராஜ்குமாரின் பெயர் இடம் பெற வேண்டிய இடத்தில், நீதிபதி நக்மா கானின் பெயரை எஸ்.ஐ., தவறுதலாக எழுதியது தெரியவந்தது.
பணியில் அலட்சியமாகவும், அடிப்படை நடைமுறைகள் கூட தெரியாமல் போலீஸ் பணி செய்யும் எஸ்.ஐ., பன்வாரிலால் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, ஐ.ஜி.,க்கு நீதிபதி நக்மா கான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.