பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மடிகேரியில் அதிரடி தடை
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு மடிகேரியில் அதிரடி தடை
ADDED : பிப் 08, 2025 06:28 AM
மடிகேரி: மடிகேரியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு அதிரடி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குடகு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா செல்ல மடிகேரி பிரபலமான இடமாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். இவர்களில் பலர், பிளாஸ்டிக் பாட்டில்களை தண்ணீர் குடித்துவிட்டு ஆங்காங்கே வீசுகின்றனர். இதை சுத்தம் செய்வதற்கு நகராட்சி ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. வணிகர்கள், லாட்ஜ் உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிறு, குறு வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
மடிகேரியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கும், சுற்றுலா பயணியர், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை எடுத்து வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்கி வைத்த வியாபாரிகள் நஷ்டம் அடைவர். இதனால், அவற்றை மட்டும் விற்பனை செய்து கொள்ளலாம். புதிய தண்ணீர் பாட்டில்கள் வாங்கக் கூடாது.
சுற்றுலா பயணியரின் தாகத்தை போக்கும் வகையில், மடிகேரியில் ஏற்கனவே உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று தண்ணீர் குடிக்கலாம். பல இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படும்.
சுற்றுலா பயணியர், ஊர் மக்கள் முன்னிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
மடிகேரியில் இத்திட்டம் வெற்றி பெற்றால், மாவட்டத்தின் மற்ற இடங்களில் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.