ADDED : அக் 29, 2024 07:50 AM

பெங்களூரு: பணி செய்யும் பி.எம்.டி.சி., பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கடிதம் எழுதி உள்ளார்.
பெங்களூரு நகரின் பொது போக்குவரத்தை நிர்வகிப்பதில் பி.எம்.டி.சி., பஸ்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகரில் தினமும் 6,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில்லறை விஷயத்திற்காக கண்டக்டர், பயணியர் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதும், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் அவ்வபோது நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், குடிபோதையில் இருந்த ஒரு பயணி, கண்டக்டரை தாக்கினார். டிரைவர், கண்டக்டர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புலம்ப ஆரம்பித்தனர்.
இதுதொடர்பாக பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி எழுதியுள்ள கடிதம்:
சமீபகாலமாக பணி நேரத்தில் பி.எம்.டி.சி., பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது தேவை இன்றி தாக்குதல் நடக்கிறது. பெங்களூரு நகரின் உயிர்நாடியே பி.எம்.டி.சி., பஸ்கள் தான். டிரைவர்கள், கண்டக்டர்கள் இரவு, பகலாக உழைத்து பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றனர். ஆனால் சமீபத்திய தாக்குதல் சம்பவங்களால், டிரைவர்கள், கண்டக்டர்கள் இடையில் பயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்தால், அவர்களால் தங்கள் பணியை அச்சமின்றி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதனால் தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.